உலக சினிமா என்று சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தையைச் சொல்வது போல் தமிழில் நிலைமை உள்ளது. ஆனாலும், சொல்வதற்கு வாகாக அந்தச் சொல்தான் இருக்கிறது. உள்ளூரிலேயே ஏராளமான படங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. என்றாலும் எதற்காக உலக சினிமாக்களைப் பார்க்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வி எழுவது இயல்புதான்.
உலக சினிமா என்றாலே ஏதோ ஓர் அந்நிய வாடை அடிப்பது போலவும் புரியாத ஒன்று போலவும் ஒரு பார்வை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், தொடர்ந்து பல வெளிநாட்டுப் படங்களைப் பார்த்துப் பழகிய பின்னர் அதுவும் மிக இயல்பாகத் தான் இருக்கிறது. காரணம் சினிமா மூலம் வெளிப்படும் உணர்வு எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. உலகப் படத்தை நினைத்து ஒதுங்கிப்போனது ஒருவித அறியாமை என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. உள்ளூர்ப் படம் வெளிநாட்டு விழாவுக்குப் போகும்போது அது உலக சினிமாவாகிவிடுகிறது. இந்தப் புரிதல் வருவதற்கே பல வெளிநாட்டுப் படங்களைப் பார்க்க வேண்டியதிருந்தது.
வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும்போது, அது ஒரு புதிய நாட்டுப் படம் என்பதால் அதன் நிலம், மனிதர்கள் போன்ற விஷயங்கள் புதிதாக இருக்கின்றன. வழக்கமாக ஒரே மாதிரியான இடங்கள், மனிதர்கள், சம்பவங்கள், கதைகள் போன்றவற்றை பார்த்துச் சலித்த கண்களுக்கு உலக சினிமா புத்துணர்வு தருகிறது. ஏனெனில், அவற்றில் நாம் பார்த்தறியாத ஒரு நிலத்தை ஒரு வாழ்க்கையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அனுமார் சஞ்சீவி மலையை மண்ணுடன் பெயர்த்து எடுத்துவந்ததுபோல் உலக சினிமா அது சார்ந்த நாட்டின் வாழ்க்கையை மண்ணின் மணத்துடன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. ஆக, ஒரு நாட்டின் பண்பாட்டை, பாரம்பரியத்தை, மக்களின் வாழ்க்கையை, மனிதர்களின் நடத்தையை குணாதிசயத்தை யதார்த்தத்துடன் சித்தரிக்கும் படங்கள் உலக சினிமாவாகின்றன.
பிற நாட்டுப் படங்களைக் காணும் போது, அவற்றை நமது படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது மனம். அந்த நாட்டிலும் நம்மைப் போல்தான் இருக்கிறார்கள். நம் வீடுகளில் நடைபெறுவது போலவே அங்கேயும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் பிரியம் பொங்கி வழிகிறது துரோகம் குரூர முகம் காட்டுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது அந்த மனிதர்களையும் நம் மனிதர்களாகப் பார்க்கும் பார்வை வருகிறது. அவர்கள் துயரம் நமது துயரமாகிறது; அவர்களது மகிழ்ச்சி நமது மகிழ்ச்சியாகிறது. ஆக, பல பேதங்கள் அகலுகின்றன. நாடுகளிடையேயான மனிதர்களிடையேயான பிரிவினையை அகற்றி உலக மனிதர்கள் அனைவரையும் ஒரே சமூகமாகப் பார்க்கும் பார்வையை உலக சினிமாக்கள் உருவாக்குகின்றன.
உலக சினிமா ஒருவகையில் சினிமா ரசனையை வளர்க்கவும் உதவும். உலகத்தின் பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்படும் பலவகையான படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் சினிமா பார்க்கும் தன்மையில் சிறிது சிறிதாக மாற்றத்தை உருவாக்கும். அதனால் படங்களையும் காட்சிமொழிகளையும் புரிந்துகொள்ள வாய்ப்பாக அது அமையும். அதுவும் சர்வதேசப் பட விழாக்களின் போது பல நாடுகளைச் சார்ந்த படங்களைப் பார்க்கும்போது வாழ்க்கை பற்றிய புரிதல் கிடைக்கும். குறைந்தபட்சம் பல நாடுகளைச் சுற்றிவந்தது போன்ற உணர்வும் திருப்தியும் கிடைக்கும்.
உலக சினிமா பார்ப்பது ஒருவகையில் நிலைக்கண்ணாடி பார்ப்பது போல்தான். அது நம்மை நமக்கே காட்டும் கண்ணாடியாகவே செயல்படும். அது நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான புரிதலை அளிக்கும். வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நாம் கையாளும் விதத்தை மாற்றும். வெறும் பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால்கூட உலக சினிமா பார்ப்பது வாழ்வுக்குப் பயனுள்ள ஒரு பொழுதுபோக்காகவே இருக்கும்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago