தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என வார்த்தை ஏற்படுத்தும் காயத்தை அன்றே சொன்னார் பொய்யாமொழிப் புலவர். ஆனால் வார்த்தை ஏற்படுத்தும் காயம் தொடர்புடையவர்களோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் சார்ந்த இரு இனக்குழுக்களுக்கு இடையே வெறுப்பையும் போரையும் கூட ஏற்படுத்தவல்லது என்பதை திரையில் சுவாரசியமாக சொல்கிறது 'த இன்சல்ட்' திரைப்படம். ஜியத் டௌயிரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் (Beirut) வசிக்கும் கிறிஸ்டியனான டோனிக்கும் அங்கே பாலஸ்தீன அகதியாக வாழும் யாசீருக்கும் இடைய ஏற்படும் சிறு பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தடித்த வார்த்தைகளால் திட்டிக்கொள்ள விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்கிறது. அதன் பின் யாருக்கு நீதி கிடைத்தது? உண்மையில் யார் பக்கம் நீதி இருக்கிறது என்பதை இரண்டு மணி நேரம் சலிப்படைய வைக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜியத் டௌயிரி. லெபனான் கிறிஸ்டியனான டோனி தனது நாட்டில் இருக்கும் பாலஸ்தீனர்களை வெறுக்கிறார். அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறார். யாசீருக்கும் டோனிக்கும் இடையிலான பிரச்சனையில் யாசீர் செய்த செயல்களைக் காட்டிலும் அவர் பாலஸ்தீனர் என்பதே டோனிக்கு எரிச்சல் தரக்கூடியதாக இருக்கிறது. யாசீர் லெபானானில் வசிக்கும் பாலஸ்தீன அகதி.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் டோனி தரப்பு வாதங்களும் யாசீர் தரப்பு வாதங்களுமாய் நீதிமன்றத்திற்குள்ளேயேதான் நிகழ்கிறது. ஆனாலும் அந்த காட்சிகள் அனைத்தும் சுவாரசியமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வாதம் நிகழும்போது எதிர்வாதம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள்தான் திரைப்படத்தை சுவாரசியமாக்குகின்றன. இருவருமே சட்டத்தை மீறியுள்ளபோது யாருக்கு தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, படத்தின் முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என தெரிந்தும் குறையாமல் இருக்கிறது.
லெபனானின் கிறிஸ்டியன் கட்சியின் கூட்டத்தில் பாலஸ்தீனர்களை நாட்டை விட்டு துரத்துவோம் என டோனி கோஷம் எழுப்புவதில்தான் படம் ஆரம்பமாகிறது. டோனியின் மெக்கானிக் ஷெட்டில் ஓடும் வீடியோ காட்சி, நீதிமன்றத்தில் மன்றத்தில் யாசீர் பற்றி டோனி கூறுவது, அதனபின் நீதிபதியையே கேள்வி கேட்பது என பல இடங்களில் டோனி கதாபாத்திரம் இனவெறுப்பை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. யாசீரும் தன் பங்குக்கு பாலஸ்தீனர்களை வெறுக்கும்போது பதிலடி கொடுப்பதாகவே இருக்கிறது. எங்கேயும் தன் இன அடையாளத்தை அவரும் விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை.
டோனி, யாசீர் என இரு தனி மனிதர்களுமே மிகவும் நல்லவர்கள். ஆனால் தங்களின் இன அடையாளத்துடன் கருத்தில் கொள்ளும்போது மோசமானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு நியாயம் கற்பித்துக்கொள்கிறார்கள். இந்த நியாயங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் உடைந்து நொறுங்குகின்றன. இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது சாட்சியங்களை எடுத்து வைக்கும்போது குற்றம் நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ டோனியும் யாசீரும் மற்றவர்களின் நியாயங்களைப் புரிந்துகொள்கின்றனர். மற்றவரின் இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்கத் தொடங்குகின்றனர். மனித அன்பு இங்குதானே ஆரம்பமாகிறது.
சிறிய அளவிலேயே முடிந்துபோன பிரச்சினையை வழக்கறிஞர்களே பெரிதாக்குகின்றனர். அதுவரை பொய் சொல்லாத இருவரும் அதனை செய்ய வைக்கப்படுகின்றனர். நாட்டின் அதிபரிடம் இருவரும் உரையாடும் காட்சி, யாசீரும் டோனியும் கார் பார்க்கிங்கில் சந்தித்துக்கொள்ளும் காட்சி, நீதிமன்றத்திலே டோனியின் வழக்கறிஞர் வஜ்டி பாலஸ்தீனர்களுக்கு பதில் சொல்லும் காட்சி என பார்வையாளர்களின் கைதட்டல்கள் காதைக் கிழித்தன. படத்தில் கமர்ஷியலுக்காக சில அபத்தங்களும், கேள்விகளும் இருந்தாலும் அவை படத்தின் சுவாரசியத்தையோ கதையையோ எந்த வகையிலும் தொந்தரவு செய்யாத வகையில் நல்ல திரை அனுபவமாகிறது 'த இன்சல்ட்' திரைப்படம்.
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே ஒரு இனக்குழு அடையாளத்தோடுதான் பிறக்கிறோம். தனது இனக்குழுவிற்கான நிலத்தில் வேறு எந்த இனமும் வாழக்கூடாது என தனது இனத்தின் மீதான பற்று மற்றொரு இனத்தின் மீதான வெறுப்பாக அறுவடை செய்யப்படுகிறது. உலகமெங்கிலும் இந்த அறுவடை அரசியல்வாதிகளாலேயே செய்யப்படுகிறது. இதனையும் பதிவு செய்யத் தவறவில்லை 'த இன்சல்ட்'. படம் முழுக்க டோனி கதாபத்திரத்தின் வெறுப்பிற்கான காரணம் படத்தின் இறுதியில் சொல்லப்பட்டாலும் நியாயப்படுத்தாமல் இருந்தது பெரும் ஆறுதல்.
வரலாற்றில் இரு இனக்குழுக்களுக்கு இடையில் பெரிய அளவில் போர் நிகழ்ந்திருந்தால் அதற்காக தற்போதைய மக்கள் ஒருவரையொருவர் வெறுக்க வேண்டாம், சண்டையிட வேண்டாம், இன அடையாளத்திற்காக மற்றவர்களை வெறுக்காதீர்கள் என்பதைதான் 'த இன்சல்ட்' ஆழமாக சொல்கிறது. தற்போதைய நிலையில் இந்தப் படம் நமது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் மிகவும் பொருந்தக்கூடிய ஒன்றே. சென்னை திரைப்பட விழாவில் திரையிட்டால் தவறவிடாதீர்கள்.
பிரெஞ்ச் லெபனீஸ் திரைப்படமான 'த இன்சல்ட்' சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் லெபனானிலிருந்து அதிகாரபூர்வமாக 90-வது ஆஸ்கார் விருதுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 74-வது வெனீஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட்து மட்டுமில்லாமல் யாசீர் கதாபாத்திரத்தில் நடித்த கமீல் எல் பாஷா சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் 22-வது கேரளா சர்வதேச திரைப்படவிழாவில் தொடக்கவிழா திரைப்படமாக திரையிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago