தமிழ்நாடு பட்ஜெட் 2023: அம்பத்தூரில் ரூ.120 கோடியில் புதுமை முயற்சிகள், திறன் பயிற்சி மையம் | TN-WISH

By செய்திப்பிரிவு

சென்னை: 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN-WISH) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, உயர் கல்வித் துறைக்கான திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: > மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி ரூபாய் செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

> இதன் அடுத்த கட்டமாக, தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0- தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை ‘திறன்மிகு மையங்களாக’ மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில், கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.

> தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN-WISH) அமைக்கப்படும். இந்த மையத்தில், இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things), அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology), துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

> 10 லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக "நான் முதல்வன்" என்ற தொலைநோக்கு திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தொடங்கினார். நான் முதல்வன் திட்டம் அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முன்னணித் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. வேலை வாய்ப்புகளை மேம்படுத்த தொழில்துறைக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கி கல்விப் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக சுமார் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.

> பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, உயர் கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

27 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்