அக்னிபாதை திட்டத்தின்கீழ் ராணுவ ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி

By செய்திப்பிரிவு

சென்னை: அக்னிபாதை திட்டத்தின் கீழ், ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 15-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், இத்தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குநர் பாத்ரே தெரிவித்துள்ளார்.

அக்னிபாதை திட்டத்தின் கீழ், ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குநர் எம்.கே.பாத்ரே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்னிபாதை திட்டத்தின் கீழ், ராணுவ ஆட்சேர்ப்பில் தற்போது முதலில் உடற்தகுதித் தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது. இந்த முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இனிமேல் முதலில் ஆன்லைன் மூலமாக பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தக் கட்டமாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பின்னர் இறுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பொதுப் பணி, தொழில்நுட்பம், குமாஸ்தா, ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்க ளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான ஆன்லைன் தேர்வு வரும் ஏப். 17-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை நாடு முழுவதும் 176 இடங்களில் நடைபெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதுவோர் அறிந்து கொள்ளும் வகையில், தேர்வுக்கான வழிமுறைகள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வில் பங்கேற்க ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், 50 சதவீதமான ரூ.250-ஐ ராணுவம் பங்களிப்பாக வழங்கும். தேர்வு எழுதுவோர் ரூ.250 செலுத்தினால் போதும். ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத ஐந்து மையங்களை தேர்வு செய்யலாம், அதில், ஒரு தேர்வு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 79961 57222, 044-256774924 ஆகிய எண்ணிலும், jiahelpdesk2023@gmail.com, joinindianarmy @gov.in ஆகிய இ – மெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE