புதுச்சேரி காவல் துறையில் நடப்பு ஆண்டு 1,143 பணியிடங்களை நிரப்ப திட்டம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கருணை அடிப்படையில் காவல் துறையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி காவல் துறை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 19 பேருக்கும் பணி ஆணையினை வழங்கினார். டிஜிபி மனோஜ்குமார் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: "காவல் துறையில் நிரப்பப்படாமல் இருந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. வாரிசு தாரர்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அவற்றையெல்லாம் காவல் துறை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நாங்கள் நிரப்பி வருகின்றோம். நாங்கள் பொறுப்பேற்றவுடன் உடனேயே வாரிசு தாரர் அடிப்படையில் 36 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்தாண்டு 356 காவலர்கள், 60 சப் இன்ஸ்பெக்டர்கள், 500 ஊர் காவல் படையைச் சேர்ந்தவர்கள், 27 ஓட்டுநர்கள் என 1,143 பணியிடங்கள் நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றது. அரசின் ஒப்புதல் பெறப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு மார்ச் மாதம் அவர்களுக்குரிய உடற்தகுதி தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படி காவல் துறையில் இருக்கின்ற அனைத்து பிரிவுகளையும் நாம் வலிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம். மேலும், கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக கடலோர காவல்படையில் 200 பேரை கூடுதலாக நிரப்ப இருக்கின்றோம். அரசின் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆண்டு வெகு விரைவில் அதுவும் நிரப்பப்பட இருக்கிறது.

ஊர்க்காவல் படை வீரர்கள் எங்களுக்கு சீருடைக்கான தொகை குறைவாக இருக்கிறது. மாதம் ரூ.90 மட்டுமே கொடுக்கின்றனர். அதனை அதிகப்படித்தி கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக பரிசீலனை செய்து அவர்களுக்கு டெல்லி யூனியன் பிரதேசத்தில் இருப்பது போல வருடத்துக்கு ரூ.5 ஆயிரம் சீருடை தொகை கொடுப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுத்திருக்கின்றது.

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. ஒட்டுமொத்த நகரத்தையும் கண்காணிக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வெகு விரைவில் இவையெல்லாம் நடக்கும் போது புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கை மேலும் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆபரேஷன் திரிசூல் நடவடிக்கையில் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE