நவோதயா பள்ளிகளில் 1,616 காலி பணியிடங்கள்: ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் முதல்வர், தலைமை ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இசை,கலை, விளையாட்டு ஆசிரியர், நூலகர் என 1,616 காலி பணியிடங்கள் உள்ளன.

இதில் முதல்வர் பணியில் 12 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 397 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியில் 683 பேர், 3-வது மொழி ஆசிரியர் பணியில் 343 பேர், இதர வகை ஆசிரியர்கள் 181 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முதல்வர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எட். முடித்து பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை படிப்புடன் பி.எட். படிப்பும், பிற ஆசிரியர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட். படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு ரூ.44,900முதல் ரூ.2,09,200 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு மத்திய கல்வி அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE