அக்னி பாதை திட்டத்தின் கீழ் ஐடிஐ, பாலிடெக்னிக் முடித்தவர்கள் தொழில்நுட்ப பிரிவில் தேர்வு - ராணுவ துணை தளபதி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ்,ராணுவத்தின் 4 ஆண்டு சேவையில் ஐடிஐ, பாலிடெக்னிக்குகளில் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றவர்களும் தேர்வு செய்யப்படுவர் என ராணுவத் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார்.

அக்னி பாதை திட்டத்தின் கீழ், ராணுவத்தில் 4 ஆண்டு சேவையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது குறித்து ராணுவத் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ கூறியதாவது:

அக்னி பாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு, சிக்னல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்குகளில் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றவர்களை இந்திய ராணுவம் தேர்வு செய்யும். இவர்கள் ராணுவத்தில் தொழில்நுட்ப சாதனங்களை கையாளும் வகையில் மேம்படுத்தப்படுவர். முதல் ஆண்டிலேயே இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அக்னி பாதை திட்டம், ஏற்கெனவே உள்ள ராணுவ வீரர்கள் தேர்வு முறையில் இருந்து மிகவும் மாற்றமுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தவறான விமர்சனம்

மத்திய அரசு அறிமுகம் செய்யும் அக்னி பாதை திட்டம், நியாயமற்ற தேர்வு முறை, பாதுகாப்பு படைகளின் திறன்களுக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ராணுவத்தினர் உட்பட பல தரப்பினரும் மிகைப்படுத்தி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த புதிய ஆள்தேர்வு கொள்கையின் முக்கிய நோக்கமே ராணுவத்தில் அதிகரித்து வரும் ஓய்வூதிய பட்ஜெட்டை தடுப்பதுதான் என்கின்றனர் நிபுணர்கள். ராணுவ பட்ஜெட்டில் கால் பகுதி ஓய்வூதியத்துக்கு செலவிடப்படுகிறது. இதைத் தடுத்தால் இத்தொகையை ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE