திருவண்ணாமலையில் வரும் 21-ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திருவண்ணா மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி நடை பெறவுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி, அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று கடந்த 2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மற்றும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக தேர்வு பெற்ற அனைத்து மாணவர்களும் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஐடிஐயில் பயிற்சி பெறாத 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்வியை தகுதியாக கொண்டவர்களும் தொழிற்சாலைகளில் 3 முதல் 6 மாதம் கால அடிப்படை பயிற்சியும் மற்றும் ஓராண்டு முதல் இரண்டாண்டு வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை வழங்கப்படும்.

தொழிற் பழகுநர் பயிற்சிக்கு பிறகு டிஜிடி மூலம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் தொழிற்பழகுநர் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் வயது வரம்பில் ஓராண்டு சலுகை வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து, அதன் விவரத்தை கொண்டு வர வேண்டும். மேலும், சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE