விஏஓ, தட்டச்சர் உட்பட 7,301 காலி இடங்களை நிரப்ப ஜூலை 24-ம் தேதி குரூப்-4 தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டபதவிகளில் 7,301 காலி இடங்களைநிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூலை 24-ம்தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் 25 நேற்று கூறியதாவது:

குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 30-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 30-ம் தேதி தொடங்கி ஏப்.28-ம் தேதி முடிவடையும். ஜூலை 24-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்டபதவிகளில் 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். அக்டோபரில் தேர்வுமுடிவு வெளியிடப்பட்டு, நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடத்தப்படும்.

கணினிவழி தேர்வுகள்

தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குறைந்த நபர்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகளை மட்டும் கணினி வழியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். சோதனை அடிப்படையில், சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் வரும்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வு கணினிவழியில் நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை ஏப்.1-ம் தேதி வெளியிடப்படும். கணினிவழி தேர்வை ஜூன் 19-ம் தேதி நடத்தி, 15 நாட்களில் முடிவு வெளியிடப்படும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் முஸ்லிம் விண்ணப்பதாரர்களிடம், ‘பிறப்பிலேயே முஸ்லிமா, மதம் மாறிய முஸ்லிமா?’ என்ற விவரம் கேட்கப்படுவது பற்றி கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசு பணியில் ‘பிசி-எம்’ பிரிவில் 3.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த விவரம் கேட்கப்படுகிறது. இதுபற்றி ஏப்.8-ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 23-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வுக்கு 11.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

குரூப்-4 தேர்வில் பதவிகள் வாரியாக காலி இடங்களை டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டார். அதன்படி, இளநிலை உதவியாளர் - 3,681, தட்டச்சர் - 2,108, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) - 274, பில் கலெக்டர் - 50, சுருக்கெழுத்து தட்டச்சர் - 1,024, ஸ்டோர் கீப்பர் - 1, வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் - 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

செய்தியாளர் சந்திப்பின்போது, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சி.முனியநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE