நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் சென்னையில் தொடக்கம்: திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை மண்டலங்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் நகர்ப்புறவேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய இரு மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப்பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தற்போது தினமும் ரூ.273 ஊதியம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதியைக் கோரியது.

இதுவரை அனுமதி கிடைக்காதநிலையில், முதல்வர் ஸ்டாலின் மாநிலநிதியில் ரூ.100 கோடி ஒதுக்கி, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தற்போது இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக முதல்வர் தொகுதி இடம்பெற்றுள்ள திரு.வி.க. நகர் மண்டலம், ஏழைகள் அதிகம் வசிக்கும் தண்டையார்பேட்டை மண்டலம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநகராட்சி 65-வது வார்டுபகுதியில் குறைவான கல்வித்தகுதி உடைய 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மழைநீர் வடிகால் தூர் வாரும் பணிகள் வழங்கப்பட்டன. பணியாளர்களுக்கான தினசரி வருகைப் பதிவு புத்தகத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வழங்கினார்.

தினமும் ரூ.342 ஊதியம்

பின்னர், மழைநீர் வடிகால் தூர் வாரும் பணியை ஆய்வு செய்தார். இப்பணியாளர்களுக்கு தினமும் ரூ.342 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE