+2, டிகிரி படித்த பெண்களுக்கு ரூ.19,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் (ஓசூர்) நிறுவனம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பிளஸ் டூ மற்றும் டிகிரி முடித்த பெண்களுக்கு ரூ.19,629 ஊதியத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 5, செப்டம்பர் 6-ம் தேதிகளில் நடத்த உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு (கலை மற்றும் அறிவியல் பிரிவு) தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.19,629, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மொபைல் உதிரிபாகங்க்ள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.19,629-ம், உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். பயிற்சி முடித்த பின்னர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் செப்டம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறாலம். மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044 - 27238894 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE