குரூப் 2 முதல்நிலை தேர்வு: 2,327 காலி பணியிடங்களுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பம் - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வனவர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வெழுத 7.90 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர், கணக்கர், உதவியாளர் உட்பட குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில் 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 20-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு, செப்டம்பர்14-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வெழுத சுமார் 7.90 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஜூலை 24 முதல் 26-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த முறை முதன்மைத் தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. மேலும், இதுவரை குரூப் 2 பணிக்கு இருந்து வந்த நேர்முகத் தேர்வும் இனி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE