டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதல்நிலைத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்: நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக அதிக கேள்விகள்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதல்நிலைத் தேர்வெழுத தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 340 பேர் எழுதினர்.77 ஆயிரத்து, 907 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வில், நடப்பு நிகழ்வுகள், மத்திய-மாநில அரசு திட்டங்கள் தொடர்பாக அதிக கேள்விகள் இடம்பெற்றதாக தேர்வெழுதியவர்கள் கூறினர்.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ஆகிய உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் 37,891 மையங்களில் ஏறத்தாழ 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 340 பேர் எழுதினர்.77 ஆயிரத்து, 907 பேர் தேர்வெழுத வரவில்லை. சென்னையில் திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப்பள்ளி உள்பட 124 மையங்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்ற இத்தேர்வில், பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், கணிதம் மற்றும் நுண்ணறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. தேர்வில், நடப்புக்கால நிகழ்வுகள், மத்திய-மாநில அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் அதிக எண்ணிக்கையில் கேட்கப்பட்டதாக தேர்வெழுதியவர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேர்வர் பாக்கியலட்சுமி கூறும்போது, “ஒருவரி வினாக்கள் மிகக் குறைவாகவே இடம்பெற்றன.

பெரும்பாலான கேள்விகள் ஆராய்ந்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டன. அதனால், ஒவ்வொரு கேள்வியையும் நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டியிருந்ததால் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இந்திய அரசியல் சாசன பகுதியில் கேள்விகள் சற்று உயர்தரத்தில் இருந்தன. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களில் இருந்து அந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழக அரசு திட்டங்கள் மட்டுமின்றி மத்திய அரசு திட்டங்கள் குறித்தும் அதிக கேள்விகள் இடம்பெற்றிருந்தன,” என்றார். கணித வினாக்கள் எளிதாக இருந்ததாக சில தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அதேசமயம், ஒவ்வொரு கேள்விக்கும் உடனடியாக இல்லாமல் கொஞ்சம் நேரம் செலவழித்துத்தான் விடைகளை கண்டறிய முடிந்தது என்றும் அவர்கள் கூறினர்.முதல்நிலைத் தேர்வு மூலம் ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர். தற்போது 90 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் 1,800 பேர் மெயின் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வானது விரிவாக விடை எழுதுவும் வகையில் அமைந்திருக்கும். இதில் பொது அறிவு தொடர்பான 3 தாள்களும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாளும் இடம்பெற்றிருக்கும்.தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கப்படும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

3 பொது அறிவு தாள்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் இறுதியாக பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.குருப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல், டிஎஸ்பி ஆக பணியில் சேர்வோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அவ்வாறு பதவி உயர்வு பெறும்போது அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட இதர பணி அதிகாரிகள் வருவாய் அல்லாத பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதற்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

26 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்