ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By சி.பிரதாப்

சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் ஜூன் 12-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வெழுத 40,233 பேர் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து திட்டமிட்டபடி நாடு முழுவதும் 292 மையங்களில் கணினி வழியில் என்சிஇடி நுழைவுத் தேர்வானது நேற்று நடைபெற்றது.

கணினி தரவுகளின்படி சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெரும்பாலான மையங்களிலும் தேர்வை தொடங்க முடியவில்லை. இதையடுத்து என்சிஇடி தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், தேர்வர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in, ncet.samarth.ac.in ஆகிய வலைத்தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE