டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வழிகாட்டி நூல் வெளியீடு: எப்படிப் படித்தால் வேலை கிடைக்கும்?

By செய்திப்பிரிவு

சென்னை பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஆலோசனை வழிகாட்டி நூலை முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தேர்வு வழிகாட்டி நூலின் ஆசிரியர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் நூலைப் பற்றி எழுதியிருக்கும் அறிமுகக் கட்டுரை இது:

மிழக இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, ஜூன் 9-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கிற இந்தத் தேர்வு, இளைஞர்கள் கொண்டாடும் ஒரு திருவிழா.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும் வெற்றி பெறவேண்டும் என்னும் கனவோடுதான், விண்ணப்பிக்கிறார்கள். அந்தக் கனவு லட்சியமாகிறபோது வெற்றி சாத்தியமாகிறது.

எப்படி உழைப்பது? - டிஎன்பிஎஸ்சி தேர்வு என்றால் பாடத்திட்டத்தில் உள்ளவற்றை அப்படியே மனப்பாடம் செய்து விடைகளை ஷேட் செய்துவிட்டு வரும் காலம் பத்தாண்டுகளுக்கு முன்பே மாறிப்போய்விட்டது. இப்போது முழுமையான சிந்தனைத் திறனும் யோசித்து எழுதுவதும்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

உதாரணமாக, ஒரு சம்பவம் எப்போது நடந்தது என்கிற தகவலை மட்டுமே தெரிந்து கொள்ளாமல், அது நடந்ததற்கான காரண காரியங்களை அறிந்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஜி 20 கூட்டமைப்பு பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்போது, அதன் உறுப்பு நாடுகள், புதிதாக இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியம், ஜி20 கூட்டமைப்பின் பணிகள், தேவை, உருவாக்கம் ஆகியவை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

குரூப் 4 தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவுப்பகுதியில் இருந்து 75 வினாக்களும், ஆப்டிடியூட் (திறன் அறிதல்) பகுதியிலிருந்து 25 வினாக்களும் கேட்கப்படுகின்றன. மொத்தம் 200 வினாக்கள்.அனைத்து வினாக்களும் நான்கு விடைகளில் இருந்து ஒரு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கும். 180 வினாக்களுக்கு உங்களால் சரியாக விடை அளிக்க முடிந்தால் நீங்கள் அரசுப் பணியாளர்தான். உற்சாகம் என்கிற ஆக்சிஜன் உங்களோடு இருந்தால் அது சாத்தியமே.

கணினி அறிவியலில் அடிப்படையாக இரண்டு கேள்விகள் இருக்கும். இதற்கு கணினி குறித்த இயல்பான அறிவோடு நவீன வளர்ச்சியையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சம்பந்தமான கேள்விகளை இந்தாண்டு எதிர்பார்க்கலாம். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் பற்றிய பட்டியலைத் தனியாகத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அண்மையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், புதிய சட்டங்கள் பற்றி எழுதி வைத்துப் படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க தினசரி செய்தித்தாள்களைப் படித்து வருவது ஒன்றுதான் வழி. சமீபத்திய நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். நடப்பு நிகழ்வுகள் குறித்து படிக்கும்போது விளையாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவேண்டும். விளையாட்டு வீரர்கள், அவர்கள் செய்த சாதனை, முறியடித்த சாதனை, சமன் செய்த சாதனை என்கிற வகையில் உங்களிடம் பட்டியல் இருப்பது உத்தமம்.

நிறைவாக நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டிய பகுதி. ஆப்டிடியூட். மனத்திறன் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன. மாதிரி வினாக்களை வைத்துக்கொண்டு பலமுறை பயிற்சி செய்து பரிச்சயம் ஆகி விட்டால் ஆப்டிடியூட் பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெற்று விடலாம்.

புதிய கோணத்தில் தேர்வுக்குத் தயாராகுவது எப்படி? - இந்தப் பகுதியை பொறுத்தவரை நீங்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறை பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. அதாவது, நீங்கள் சாதாரணமாகப் படிக்கும் ஒரு தகவல், தேர்வில் எந்த மாதிரியான கோணத்தில் கேட்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி தேர்வு என்பது வேறு: வேலைக்காகப் போட்டித் தேர்வுக்குப் படிப்பது என்பது வேறு. இந்தத் தேர்வில் கேள்விகளும் நேரடியாக இருக்காது.

சுற்றிவளைத்துதான் கேட்கப்படும். `இது என்ன கேள்வி?' என்று நீங்கள் யோசித்து, யோசித்து.. `அட, அதுதானா இது?' என உங்கள் மூளைக்குள் ஒரு பல்பு எரியும். உதட்டில் புன்னகை பூக்கும். அதுதான் வெற்றிப் புன்னகை. இப்படித் தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் உங்களுக்கு 170 கேள்விகளுக்கு புன்னகை பூத்துவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுவதும் புன்னகை நீடித்திருக்கும்.

அப்படி என்னதான் கேள்வி கேட்பார்கள்? கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்: சுந்தரம் பிள்ளையை போற்றும் முகமாக தமிழக அரசு நிறுவியது யாது? - என்பது 2019ஆம் ஆண்டு பொதுத்தமிழ் பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. தேர்வுக்கு நன்றாகத் தங்களைத் தயார் செய்தவர்கள் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். முதலில் `சுந்தரம் பிள்ளை' என்றால் `எந்த சுந்தரம் பிள்ளை' என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம்தான் அவர் தொடர்பாக ஏதாவது நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கிறதா? என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆனால், நீங்கள் நிறையச் சிரமப்பட வேண்டியதில்லை. வினாவிற்கு கீழே நான்கு விடைகள் `ஆப்ஷன்'களாகக் கொடுக்கப்பட்டிருக்கும். விடையைப் பார்த்தால் சிலருக்கு உடனே பிடிபட்டுவிடும். இந்த வினாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளைப் பாருங்கள். அ) பல்கலைக்கழகம் ஆ) அரசவைக் கவிஞர் பணி இ) அறக்கட்டளை ஈ) பேராசிரியர் பணி

விடை கண்டுபிடிப்பதில் நீக்கல் (டெலிஷன்) முறை என ஒரு வழி இருக்கிறது. 'இது நிச்சயமாக விடையாக இருக்காது' என்கிற அளவில் சில விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை நீக்கிவிடலாம். மேற்கண்ட கேள்வியில், தமிழக அரசு யார் பெயரிலும் அரசவைக் கவிஞர் பணியை நிறுவவில்லை. எனவே, விடை `ஆ' நிச்சயமாக இல்லை. ஒருவர் பெயரில் பேராசிரியர் பணி வழங்கும் நடைமுறையும் இல்லை. எனவே `ஈ' விடையும் தவறு. அடுத்து, `பல்கலைக்கழகமா?' `அறக்கட்டளையா?' என்பதுதான் நமக்கு உள்ள வாய்ப்புகள்.

இப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களை சொல்லிப்பாருங்கள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். அட.. விடை நமக்கு கிடைத்துவிட்டது! `சுந்தரம் பிள்ளை' என்று நமக்குக் கொடுத்திருப்பது, நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களை. எனவே விடை, அ) பல்கலைக்கழகம் என்பதே சரி. இப்படிக் கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து தொடங்கி வினாவை சென்றடைவது என்பது எளிமையாக இருக்கும்.

இன்னொரு கேள்வியைப் பாருங்கள். அதியமான் தூதுவராக ஔவை சென்றது குறித்து கூறும் நூல் எது? அ) பதிற்றுப்பத்து ஆ) பரிபாடல் இ) புறநானூறு ஈ) ஆத்திசூடி

ஔவைக்கு ஆயுளை நீட்டிக்கும் நெல்லிக்கனியை அதியமான் என்கிற குறுநில மன்னர் கொடுத்தார் என்பதுதான் நமக்குத் தெரிந்த செய்தி. ஆனால், இப்படி ஒரு கேள்வியை யோசித்து இருக்கவே மாட்டோம் அல்லவா? நான்கு விடைகளைப் பாருங்கள். `ஆத்திசூடி' நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவை ஒருவரிப் பாடல்கள். `பதிற்றுப்பத்து' சேர மன்னர்களைப் பற்றிப் பாடுகிறது. `பரிபாடலில்' விஷ்ணுவின் பெருமைகள், வானியல் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

எனவே, டெலிஷன் முறைப்படி பார்த்தால் புறநானூறுதான் சரியான விடை. மேலும், புறநானூற்றில் ஔவையார்தான் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியிருக்கிறார். இப்படித்தான் நீங்கள் அலசி ஆராய்ந்து படிக்கவேண்டும்.

இனிவரும் நாள்களில் பாடப் பகுதி தரப்படும். அதிலிருந்து வினாக்கள் எப்படிக் கேட்கப்படலாம் என்கிற பகுப்பாய்வு நோக்கில் கேள்விகளும் தரப்படும். முழுமையான விவரங்களுக்கு, `இந்து தமிழ் திசை' வெளியிட்டுள்ள TNPSC GROUP IV GUIDE படியுங்கள்.

- கட்டுரையாளர்: முனைவர் ஆதலையூர் சூரியகுமார் | ‘இந்து தமிழ் திசை' வெளியீடான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குரூப் IV கையேடு நூலாசிரியர் / கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

16 days ago

வேலை வாய்ப்பு

17 days ago

வேலை வாய்ப்பு

24 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்