நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 229 பேருக்கு என்எல்சியில் நிரந்தர வேலைவாய்ப்பு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: நெய்வேலியில் என்எல்சி சுரங்கப்பணிக்காக வீடு, நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 229 பேருக்கு என்எல்சி நிர்வாகம் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கிஉள்ளது.

என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கிவந்த நிலையில், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, தமிழக அரசுநிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு என்எல்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது. தொடர்ந்து,அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடலூர் ஆட்சியர் தலைமையில் என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதையடுத்து, என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க தீர்மானிக்கப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 698 பேர் தேர்வை எழுதிய நிலையில், 22 பெண்கள் உட்பட 229 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர்களுக்கு 3 ஆண்டு சிறப்புப் பயிற்சி அளித்து, பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று என்எல்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும், பயிற்சி காலத்திலேயே அவர்களுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஊதியம்வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE