6,151 பணியிடங்களுக்கான குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களுக்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள்டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2022 மே 21-ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதியதில் 57,641 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு அடுத்தகட்டமான முதன்மைத் தேர்வு 2023 பிப்.25-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 51,987 பேர் எழுதினர். தேர்வு முடிந்து 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாவதில் தொடர் தாமதம் நிலவியது.

இந்நிலையில், குரூப் 2 தேர்வுமுடிவுகள் ஜன.12-ம் தேதி வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்தது. ஆனால், ஒருநாள் முன்னதாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

குரூப்-2 பதவிகளில் 161, 2ஏ பதவிகளில் 5,990 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு 483 பேர் தேர்வாகியுள்ளனர். அதாவது161 இடங்களுக்கு 483 பேர்போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு பின்னர் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுநடத்தப்பட உள்ளது.

இதுதவிர 5,990 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிவில், இந்தமுறை அடுத்தகட்ட கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்களின் விவரம் மட்டுமே தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. குரூப்-2 நேர்முகத் தேர்வில் பங்கேற்று பதவிகளை தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள், 2ஏ பணிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE