பதஞ்சலி ஃபுட்ஸ் மொத்த வருவாய் ரூ.31,821 கோடி: ஒரு பங்குக்கு ரூ.6 ஈவுத்தொகையாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் 2023-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவன இயக்குநர்கள் குழு ஒரு பங்குக்கு ரூ.6 ஈவுத்தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு முடிவுகளின்படி 2023-ம் ஆண்டில் தொடர்ச்சியான சிறப்பான வணிக மற்றும் நிதி செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த 2021-22-ல் ரூ.24,284.38 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.31,821.45 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் கடந்த 2022 நிதியாண்டில் ரூ.1,074.38 கோடியாக இருந்த நிலையில் தற்போது 9.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,178.96 கோடியாக உள்ளது.

அதிகம் விற்பனையாகும் நுகர்பொருட்கள் (எஃப்எம்சிஜி) பிரிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,683.24 கோடியிலிருந்து ரூ.6,218.08 கோடியாக வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது சதவீத அடிப்படையில் 2022-ம் ஆண்டில் 6.95 சதவீதமாக இருந்த எஃப்எம்சிஜி பிரிவு வருவாய் வளர்ச்சி தற்போது 19.72 சதவீதமாக உள்ளது.

தயாரிப்புகளின் மதிப்பை உயர்த்துதல், பல்வேறு வகைகளில் விநியோகத்தை விரிவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் வணிகத்தில் வருவாய், லாபம் வெளிப்பட்டுள்ளது. இப்பிரிவில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடிக்கு முந்தைய வருவாய் 2023 நிதியாண்டில் ரூ.1,136.60 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.189.04 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய வருவாயில் எஃப்எம்சிஜி வணிகத்தின் பங்கு 72 சதவீதமாகும்.

நிறுவனத்தின் சமையல் எண்ணெய் வணிகமும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2022-ம் நிதியாண்டில் 1.63 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி செய்து ரூ.22,882.76 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் 2023-ம் நிதியாண்டில் 1.91 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி செய்து ரூ.25,634.45 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE