கேஷ் ஆர்டரில் 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் குவிகிறது: சொமேட்டோ ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோவின் கேஷ் ஆர்டரில் 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வார இறுதியில் மட்டுமே ஒட்டுமொத்த கேஷ் ஆர்டரில் சுமார் 72 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளதாக சொமேட்டோ தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. எனவே, மே 23-ம் தேதி (நாளை) முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இருந்தாலும் மக்கள் இந்த அறிவிப்பு வெளியானது முதலே தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தொடங்கிவிட்டதை சொமேட்டோ பகிர்ந்த தகவல் உறுதி செய்கிறது. அது குறித்து ட்வீட் செய்துள்ளது சொமேட்டோ. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியான நொடி முதலே சமூக வலைதளத்தில் அதை விமர்சித்து மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் ‘இதை தான் நாங்கள் அப்போதே சொன்னோம்’ என சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE