மும்பை: போதுமான அவகாசம் இருப்பதால் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, நாணய புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கை. தூய்மையான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதும், கிழிந்த, எரிந்த, பழுதடைந்த நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் விதி.
இந்த விதியின் கீழ், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, குறிப்பிட்ட காலத்தில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. திரும்பப் பெறப்படும் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை அச்சடித்து விநியோகித்து வருகிறது. சாதாரண காலங்களில்கூட கிழிந்த, எரிந்த, பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடைமுறையை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. இதேபோன்ற ஒரு நடவடிக்கை 2013-14-ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 2005-க்கு முன் அச்சான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், எனவே அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், இம்முறை ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள 4 மாத காலம் அவகாம் இருக்கிறது. எனவே, யாரும் அவசரம் காட்ட வேண்டாம்; வங்கிகளில் குவிய வேண்டாம். செப்டம்பர் 30-க்குப் பிறகும் இந்த நோட்டுக்கள் சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கும் (அது எப்படி என்பதை அவர் விவரிக்கவில்லை). இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தவும், மீண்டும் உறுதிப்படுத்தவுமே இதைத் தெரிவிக்கிறோம். இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் குறித்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் தங்களின் பணத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது.
» “நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது 2019 மக்களவைத் தேர்தல்” - சத்ய பால் மாலிக்
» 'நார்கோ சோதனைக்கு தயார்' - மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷன் சிங் ரியாக்ஷன்
தற்போது மற்ற மதிப்புகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்தில் உள்ளன. ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இதன் புழக்கம் அதிகபட்சமாக ரூ.6.73 லட்சம் கோடி என்ற அளவில் இருந்து, 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நோட்டுகள் அதன் வாழ்நாளை நிறைவு செய்துள்ளன" என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ அறிவிப்பு: ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, மே 23-ம் தேதி (நாளை) முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்று ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ‘ரூ.2000 நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் முறையான படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் நகலை வழங்க வேண்டும்’ என சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நேற்று (மே 21) வெளியிட்ட அறிவிப்பில், "பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை. நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக்கொள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்து ப.சிதம்பரம் பதுக்கல்காரர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். அதை வாசிக்க > ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்கள்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடல்
நகைக் கடைகளில்... - இதனிடையே, ரூ.2000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானபோதே பெருநகரங்களில் உள்ள நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் ரூ.2000 நோட்டுகளை கட்டுக்கட்டாக அள்ளிக்கொண்டு நகை வாங்க வருவதாக கூறப்படுகிறது. நகைக் கடைகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றன. | விரிவாக வாசிக்க > ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் எதிரொலி | கருப்புப் பணத்தை மாற்ற புதிய வழிகளில் முயற்சி - நடவடிக்கை எடுக்குமா அரசு?
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago