ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற, எந்த அடையாளச் சான்றுகள், ஆவணமும் தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, மே 23-ம் தேதி (நாளை) முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்று ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ‘ரூ.2000 நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் முறையான படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் நகலை வழங்க வேண்டும்’ என சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை. நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக்கொள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

நோட்டுகளை மாற்றுவதில் சேவை குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்காவிட்டாலோ, வங்கி அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றாலோ cms.rbi.org.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE