போலி ஜிஎஸ்டி பதிவுகளை அடையாளம் காண நாடு முழுவதும் சிறப்பு சோதனை: உங்கள் நிறுவனமும் சோதிக்கப்படுமா?

By செய்திப்பிரிவு

போலி ஜிஎஸ்டி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்,போலி ஜிஎஸ்டி பதிவைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில வரித் துறை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு சிறப்பு சோதனையை தொடங்கி உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே வரி முறையைக் கொண்டுவரும் நோக்கில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அறிமுகம் செய்தது.தற்போது நாடு முழுவதும் 1.39 கோடி தொழில்கள் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்துள்ளன. இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. எனினும், இதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட சோதனையில், 2022-23 நிதி ஆண்டில் 14,000 ஜிஎஸ்டி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 2021-22 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 12,574 ஆக இருந்தது.

2021 - 22 நிதி ஆண்டில் ரூ.54,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23 நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஜிஎஸ்டி ஏய்ப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில் மே 16 முதல் ஜூலை 15 வரை 2 மாதங்களுக்கு, நாடு முழுவதும் ஜிஎஸ்டி பதிவு தொடர்பாக சோதனை நடத்தும் பணியில் மத்திய, மாநில வரி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

யார் மீது சோதனை நடத்தப்படும்?

டேட்டா அனாலிடிக்ஸ் உட்பட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் போலி ஜிஎஸ்டி பதிவுகள் அடையாளம் காணப்படும். சந்தேகத்துக்குரிய பதிவுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் வரப்பெற்றவர்கள், அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது, ஜிஎஸ்டி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டி தொடர்பான நடைமுறைகளை முறையாக பின்பற்றுபவர்கள், தற்போதைய சிறப்பு சோதனை குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் சந்தேகத்துக்குரிய பதிவாளர்களிடம் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் வரித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், தொழில் நடத்துபவர்கள், தங்கள் வசம் இருக்கும் ஜிஎஸ்டி ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE