இந்தியாவில் கிளவுட் கட்டமைப்புக்கு 2030-க்குள் அமேசான் வெப் சர்வீசஸ் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமான அமேசான் வெப் சர்வீசஸ் (ஏடபிள்யூஎஸ்) இந்தியாவில் கிளவுட் கட்டமைப்பில் ரூ.1.06 லட்சம் கோடியை வரும் 2030-க்குள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கிளவுட் சேவைகளுக்கான வாடிக்கையாளர் தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வரும் 2030-க்குள் ரூ.1,05,600 கோடியை கிளவுட் கட்டமைப்புகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரூ.1,94,700 கோடி பங்களிப்பினை வழங்கும்.

இந்தியாவில் தரவு மைய உள்கட்டமைப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக நடவடிக்கைகளில் சராசரியாக 1,31,700 பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு உருவாகும்.

குறிப்பாக, கட்டுமானம், பராமரிப்பு, பொறியியல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு ஏடபிள்யூஎஸ் தெரிவித்துள்ளது.

ஏடபிள்யூஎஸ் 2016-2022 இடையிலான ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.30,900 கோடியை (3.7 பில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் ஏடபியூஎஸ்-ன் மொத்த முதலீடு வரும் 2030-க்குள் ரூ.1,36,500 கோடியை எட்டும். தொழிலாளர் மேம்பாடு, பயிற்சி மற்றும் திறன் வாய்ப்புகள், சமூக ஈடுபாடு, நிலைத்தன்மை முயற்சிகள் போன்ற உள்ளூர் பொருளாதார பகுதிகளில் ஏடபிள்யூஎஸ் முதலீடு தொடர் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE