இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

பிரஸல்ஸ்: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில் நடைபெற்ற இந்திய - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்தின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்ட பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமம் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கரியமில வாயு வெளியேற்ற கட்டுப்பாடு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களை, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான தடைக்கல்லாகப் பார்க்கவில்லை என்றும், இந்த விவகாரம் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பிரச்சினைக்கு இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து தீர்வு காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெரும்பாலான பொருட்கள், மூலப்பொருட்கள் ஆகியவற்றின் மீது இந்தியாவின் சுங்கவரி கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்த பியூஷ் கோயல், உண்மையில் இந்தியாவின் சுங்கவரி கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களுக்கான சுங்கவரி கட்டணங்கள் மிகவும் குறைவு என்று கூறிய அமைச்சர், உலக வர்த்தக அமைப்பால் ஒப்புக் கொள்ளப்பட்ட சுங்க கட்டண வரி விகிதங்களை விட இந்தியாவின் உண்மையான பயன்பாட்டு சுங்க கட்டண வரி விகிதங்கள் குறைவு என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE