எ
த்தனை முறை சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்று யாரும் முடிவு எடுத்து விட்டால் என்ன செய்ய முடியும்.? இளைஞர்களின் எதிர்காலம், சமுதாய நலன், அரசு வருமானம் என்று பல முனைகளிலும் தேவையற்ற எதிர் விளைவுகளை உண்டாக்க வல்ல, கேளிக்கை வரிச் சலுகை, தேவைதானா...?
இதனால் எத்தனை பேருக்கு உடனடி நன்மை...? எத்தனை லட்சம் பேருக்கு நீண்ட காலத் தீமை....?
திரைப்படங்களின் மீது, 30% வரை, கேளிக்கை வரி விதிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்தமும் உள்ளாட்சிகளுக்குப் போய்ச் சேரும்.
சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறை, அதிகார பூர்வமாக ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, 30%க்கு பதிலாக, நேரடித் தமிழ்ப் படங்களுக்குக் கேளிக்கை வரி - 10% பிற மொழிப் படங்களுக்கு 20%. இதிலும், பழைய படங்களுக்குக் கேளிக்கை வரி - 7% மற்றும் 14% மட்டுமே. வரிக் குறைப்பின் பிரமாண்டம் புரிகிறதா...?
புதுத் தமிழ்ப் படங்களுக்கு - 66%, பழைய படங்களுக்கு - 75%க்கும் மேல் சலுகை. என்ன ஒரு தாராளம்!
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள்தாம், அனைத்திலும் மிக முக்கியம். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் பலவற்றை, உள்ளாட்சி அமைப்புகள்தாம், நிறைவேற்றித் தர முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற, முதல் சுமார் 20 ஆண்டுகள் வரையில், பஞ்சாயத்துகள், நகராட்சிகள் ஆற்றிய பணி, அசர வைக்கக் கூடியது. ஆங்காங்கே அவ்வப்போது தங்கள் சக்திக்கு உட்பட்டு, எண்ணற்ற நற்காரியங்களை இவ்வமைப்புகள் செய்து வந்தன.
எப்படி சாத்தியம் ஆயிற்று...? ஒரு மாய மந்திரமும் இல்லை. அரசுக்கு இணையாக நிதி, நிர்வாக அதிகாரம் கொண்ட அமைப்புகளாக இவை விளங்கின. பள்ளி ஆசிரியர் தொடங்கி ஆய்வாளர் வரை... ஏன்.., ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் கூட, உள்ளூர்ப் பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பணி அமர்த்தப் பட்டவர்கள், தரமான தன்னலமற்ற சேவையைத் தருவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டார்கள். பல்வேறு துறைகளில் இன்று நாம் காணும் முன்னோடிகள், முன்னுதாரணங்கள், விற்பன்னர்கள், சாதனையாளர்கள்.... இவ்வாறான 'உள்ளூர் கண்டுபிடிப்புகள்'.
தலையிடாக் கொள்கை
பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது, ஒரு பஞ்சாயத்து போர்டு தலைவர், தனது அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்க வேண்டிய ஒரு முடிவை, மாநில முதல்வராக இருந்து கொண்டு, தான் தீர்மானிப்பது தவறு என்று பொது மேடைகளிலேயே கூறினார். இறுதி வரை, 'தலையிடாக் கொள்கை'யில் இருந்து துளியும் வழுவாமல் ஆட்சி செலுத்தினார். அவரது காலம் பொற்காலம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதிகாரம் மூலம் ஆதாயம் அடையலாம் என்று எப்போது சிந்திக்க ஆரம்பித்தார்களோ, அப்போது தொடங்கியது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிரான `அறிவிக்கப் படாத யுத்தம்'. மேலும் மேலும் மேலும், அதிகாரங்கள் அனைத்தையும் மாநில அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். மாநிலங்களுக்கு சுய அதிகாரம் கேட்டு, மைய அரசுக்கு எதிராக வீர முழக்கம் இடுகிற யாரும் - தலைவர்கள், தனிநபர்கள், சமூக, அரசியல் இயக்கங்கள் - உள்ளாட்சிகளுக்காக ஒரு முனகலைக் கூட, வெளியிடுவது இல்லை.
கடந்த சுமார் 50 ஆண்டுகளில் என்ன நடந்தது....? உயிர்ப்பான ஜனநாயகத்தின் அடித்தட்டு அமைப்புகள் அனைத்தும், `திட்டம்' இட்டு அடியோடு அழிக்கப்பட்டன. இதில், இந்தியாவுக்கே வழிகாட்டி என்கிற `பெருமை' நமக்குத்தான்!
இன்று, உள்ளாட்சி அலகுகள், முற்றிலுமாக வலுவிழந்து, எலும்பும் தோலுமாய், குற்றுயிரும் குலை உயிருமாய், ஆதரிப்பார் யாருமின்றி அனாதையாய், வெறுமனே, `பேருக்கு' உயிருடன் இருக்கின்றன. இலவசங்களின் வழியே, கேளிக்கைகளின் மூலமே மக்களைத் திருப்திப் படுத்தி விடலாம் என்கிற அரசியல் சித்தாந்தம் வேரூன்றி விட்ட நிலையில், பஞ்சாயத்தாவது, நகராட்சியாவது....!
'அள்ளிக் கொடுப்பதும், அள்ளிக் கொள்வதும்' என்கிற ஒற்றை வரியில், மொத்த வரிக் கொள்கையும் அடங்கி விடுகிறது. கேளிக்கை வரியைப் பற்றிய தெளிவான புரிதலும், அதில் சலுகை காட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளும் பற்றி, சம்பந்தப் பட்டவர்களுக்கே பிடிபடவில்லை எனும் போது, சாமான்யர்களுக்கு எங்கே புரியப் போகிறது...? நியாயப்படி என்ன செய்து இருக்க வேண்டும்...?
30% கேளிக்கை வரியை முழுமையாக விதிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள், நீதிமன்றத்தை அணுகட்டும்; தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கட்டும்; மாண்பமை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். எது எதற்கோ நீதிமன்றத்துக்குச் செல்கிறவர்கள், கேளிக்கை வரி நீக்கம் கேட்டு ஏன் போகக் கூடாது...?
இரட்டை வரி உண்மையா
ஒரே ஒரு வாதம் மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது - 'இரட்டை வரி'. இது, நன்கு தெரிந்தே பரப்பப் படுகிற விதண்டாவாதம். உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் கேளிக்கை வரி, 'ஜி.எஸ்.டி.' வரம்புக்குள் வராது.
இது ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வரி கட்டுகிறவர்கள், தண்ணீர் வரி செலுத்துவது இல்லையா..? சாலை வரி தந்து விட்டு, வாகன வரியும் விதிக்கப்படுகிறதே...அது எப்படி..? இரண்டும் வெவ்வேறு வரிகள். அவ்வளவு தூரம் கூடப் போக வேண்டாம். படம் பார்க்கத் திரையரங்கு செல்கிறோம். 'டிக்கெட்'-க்கு பணம் தந்து விட்டோம். பிறகு, வாகனம் நிறுத்தத் தனிக் கட்டணம் எதற்கு...? இங்கே மட்டும் இரண்டும் வெவ்வேறு; கேளிக்கை வரி என்றால் மட்டும் இரட்டை வரி ஆகிவிடுமா..? நீதிமன்றத்தில், சட்டத்தின் 'நேர் பார்வை'யில், செல்லாது இந்த வாதம். அதனால்தான் வேறு எங்கேயோ கதவைத் தட்டுகிறார்கள்.
வரி விதிக்கிறவர்களின் கவனம், அதனை முழுமையாக வசூலிப்பதில்தான் இருக்க வேண்டுமே தவிர, சட்டப்படி சேர வேண்டியதை, சலுகை காட்டி குறைப்பதில் அல்ல. அதனை, மாண்பமை நீதிமன்றம் வழங்குவதுதான் சரியான வழிமுறை. அந்த நிலையில், யாரும் குறை சொல்ல முடியாது.
உலகம் முழுவதும், வரி விதிப்பு முறையில் பின்பற்றப்படும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை இதுதான்: கேளிக்கைகள், ஆடம்பரங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட தீமைகள் - மிக உச்ச நிலை வரி விகிதத்துக்கு உட்படுத்தப் பட வேண்டும். இவற்றின் மீது சலுகை காட்ட விடுக்கப்படும் கோரிக்கைகள் எதையும், மக்கள் நலன் நாடும் அரசுகள் பரிசீலனைக்கே கூட எடுத்துக் கொள்வது இல்லை. உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது.
இலவசக் கல்வி, இலவச மருத்துவ சிகிச்சை, பேருந்துக் கட்டணச் சலுகை, நலிந்தோருக்காக காப்பீட்டுத் தொகையில் பங்களிப்பு, ஆதரவற்றோர், முதியோருக்கான நல உதவிகள், வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கான முதலீட்டு, நிதியுதவித் திட்டங்கள்.... ஆகியனவற்றை உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு செயல்படுத்த வேண்டுமானால், வரி வரும் பாதையில் மிகுந்த கவனம் செலுத்தியாக வேண்டும்.
தற்போது அரசு அறிவித்து இருக்கும் கேளிக்கை வரிச் சலுகை காரணமாக ஆண்டு தோறும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட இருக்கும் உத்தேச வருமான இழப்பு எவ்வளவு...? இதன் முழுப் பயனும் யாருக்கு சென்று சேரப் போகிறது...? வரிக் குறைப்பு நடவடிக்கை, எந்த வகையில், வரிச் சலுகையை மறுப்பதைக் காட்டிலும், சிறந்த மாற்றாகக் கருதப் படுகிறது...?
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கிற நிலையில், அவ்வமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சேர்ந்து முடிவு எடுப்பதுதானே, இன்னமும் சரியானதாக இருக்க முடியும்...?
சலுகை கேட்பது நியாயமா ?
திரைத்துறைக்கு எதிரான வாதம் அல்ல இது. உள்ளாட்சிகளுக்கு ஆதரவானது அவ்வளவே. எந்த ஒரு கோரிக்கையிலும் சராசரி நியாயமும் சட்ட நிவாரணமும் அடங்கி இருக்கவே செய்யும். அதேபோல், அதனை மறுக்கிற அல்லது நிராகரிக்கிற சிந்தனையிலும், ஏதோவொரு வலுவான பொது நலன் உள்ளடங்கி இருக்கக் கூடும் அல்லவா....?
ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு சலுகை, நிவாரணம் கேட்பது நியாயமானதுதான். இதற்கு அவர்களுக்கு, ஜனநாயக உரிமை நிச்சயம் இருக்கிறது. ஆனால், ''சமன் செய்து சீர் தூக்கும்'' (உலகப் பொது மறை) பொறுப்பும் கடமையும், அரசுக்கு உள்ளதை மறந்து விடலாகாது. போதும். கேளிக்கைகளுக்கு நாம் அளித்து வரும் அதீத முக்கியத்துவம் இதோடு நிற்கட்டும். அடித்தட்டு மக்களின், அவர்களின் பிள்ளைகளின், எதிர்காலத்துக்கு நாம் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது; ஆண்டுக் கணக்கில் காத்துக் கிடக்கிறது. அந்தப் பக்கம் நமது கவனம் திரும்பினால், எல்லோருக்குமே நல்லது.
அதுவே நாளை, அதிகாரத்துக்கும் உதவும்.
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago