ஆடிட்டர்களை அரசே குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டாம்!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

மத்திய அரசின் வருவாய்த் துறை சமீபத்தில் ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ‘ஆடிட்டர்’, ‘கம்பெனி செக்ரடரி’ ‘காஸ்ட் அக்கவுன்டன்ட்’ ஆகியோரும் இனி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், தொடர்புடைய நபர்கள் ஆவார்கள் என்கிறது அந்த அறிவிக்கை. இதன் மூலம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மீதான அரசின் பிடி மேலும் இறுகுகிறது.

குறிப்பிட்ட காலத்துக்கு பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆடிட்டர்கள் மற்றும் செயலர்களை அரசு அறிவுறுத்துகிறது.

தமது வாடிக்கையாளருக்காக ஆடிட்டர்கள், சில பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும். அசையா சொத்துகளை வாங்கல் மற்றும் விற்றல்; வாடிக்கையாளரின் பணம், பங்குகள், பிற சொத்துகளைக் கையாளுதல்; அவர்களின் வங்கிக் கணக்கை நிர்வகித்தல்; நிறுவனம் நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல்; அறக்கட்டளை, வணிக நிறுவனங்களை வாங்குதல் மற்றும் விற்றல் உள்ளிட்ட இப்பணிகள் இனி, இந்தச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் நடவடிக்கைகள் ஆகும்.

என்ன பொருள்? மோசடிப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனி நபர்கள், நிறுவனங்கள் மட்டுமன்றி அவர்களின் ஆலோசகர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். நல்ல நோக்கம்; பாராட்டுக்குரிய நகர்வு என்று தோன்றலாம். ஆனால், இது அப்படி ஒன்றும் அறிவார்ந்த அணுகுமுறை அல்ல.

நாடாளுமன்ற சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்ட ‘பட்டயக் கணக்காளர்’ நிறுவனம், தரமான நிதி நிபுணர்களை அளிப்பதில் தலை சிறந்து விளங்குகிறது. நிதிச் சட்டங்கள், வழிமுறைகள், கணக்குகள் மீதான இவர்களின் நிபுணத்துவம் மிக நிச்சயமாக நமது நாட்டின் அறிவுசார் சொத்துக்கான அடையாளங்களில் ஒன்று. இவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொள்வதை விட்டு, அரசுக்கும் மோசடிக்காரருக்கும் இடையிலான போட்டியில், கோட்டுக்கு ‘அந்தப் பக்கம்’ தள்ளி விடுகிறது சமீபத்திய ஆணை. இது அத்தொழிலுக்கு எதிராக இழைக்கப்படும் மாபெரும் அநீதி.

ஆடிட்டர்கள், செயலாளர்களை வருவாய்த் துறை, ‘நிர்ணயிக்கப்பட்ட வணிகம் (அ) தொழில் செய்வோர்’ பட்டியலில் இந்தப் புதிய அறிவிப்பு சேர்க்கிறது. சூதாட்ட விடுதி நடத்துவோர், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், விலையுயர் கற்களில் வணிகம் செய்வோர், பிறருக்காக பணம் / பங்குகளை கையாளுவோர். வங்கி நிறுவனம், நிதி நிறுவனம், இடைநபர் (அ) நியமிக்கப்பட்ட நபர் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட வணிகம் (அ) தொழில் செய்வோர் பட்டியலில் இருப்பவர்கள். இந்தப் பட்டியலில் ஆடிட்டர்கள், செயலாளர்களைச் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? அரசின் அறிவிக்கை சற்றும் நியாயமற்றது.

பொருளாதாரக் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் அறவே தடுக்கப்பட வேண்டும். அதற்கு என்ன வழி? சட்டப் பிரிவுகளில் தெளிவு வேண்டும்; அவற்றைத் தீவிரமாக அமலாக்குவதில் திறமை வேண்டும். இதில் போதிய கவனம் செலுத்தப்படுகிறதா..?

பொருளாதாரக் குற்றங்களைக் களைவதில், பொருளாதாரக் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் தற்போதைய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டாலும், பல குறைகள் உள்ளன. இவற்றைச் சரி செய்து, அரசின் கரங்களை வலுவாக்குவதை விட்டு, பொதுமக்களின் பார்வையில் ஆடிட்டர்கள், செயலாளர்கள் மீது தேவையற்ற எதிர்மறை பார்வை ஏற்படுகிற வண்ணம் விதிமுறைகளை உருவாக்குவது அரசின் நோக்கத்தைச் சிதைத்து விடும்.

ஆடிட்டர்கள் தவறு இழைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆடிட்டர் சட்டம் 1949 வழிமுறைகளை வகுத்து இருக்கிறது. அது மட்டுமன்று. அரசுடன் எப்போதும் ஒத்துழைக்கிறவர்களாகத்தான் பட்ட யக் கணக்காளர்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள். அவர்களின் தொழில்முறை நிபுணத்துவத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கலாம். மாறாக அவர்களை எதிர் தரப்புக்குத் தள்ளி விடுதல் தவறான முடிவு. அரசு இதனை உடனடியாக மறுபரிசீலனை செய்தல் வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்