திவால் நடைமுறைக்கு ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம் விண்ணப்பம்: ரூ.6,500 கோடி கடன் இருப்பதாக தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று முன்தினம், இந்நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்துள்ளது.

அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மாற்று இன்ஜின்கள் வழங்குவதில் பிடபிள்யூ நிறுவனம் தாமதம் செய்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 13 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் 57 விமானங்கள் உள்ளன. மாற்று இன்ஜின்கள் வழங்கப்படாததால் தற்போது அதன் 25 விமானங்கள் செயல்படாமல் உள்ளன. 2022 ஏப்ரல் மாதம் வாரத்துக்கு 2,771-ஆக இருந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவை நடப்பு ஆண்டு ஏப்ரலில் 1,362 ஆக குறைந்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறது.

இந்நிலையில், அந்நிறுவனம், திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ளது. அதில், “தற்போதைய நிலையில் விமான சேவையை முழுமையாக தொடர்வதற்கு 103 இன்ஜின்கள் தேவை. ஆனால், 56 இன்ஜின்களே கைவசம் உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் ரூ.6,521 கோடியாக உள்ளது. இதுவரையில் எங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் எந்தத் தாமதமும் செய்யவில்லை. ஆனால், தற்போது இக்கடனை தொடர்ந்து அடைப்பதற்கான போதுமான சொத்துகள் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், மே 5-ம் தேதி வரையில் அதன் விமான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் விமான சேவையை நிறுத்தியதற்கு விளக்கம் கேட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE