2022-23 நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் ஜிஎஸ்டி ஏய்ப்பு இரு மடங்காக உயர்ந்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

2022-23 நிதி ஆண்டில் ரூ.1.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் ரூ.21,000 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதி ஆண்டில் ரூ.54,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.21 ஆயிரம் கோடி மீட்கப்பட்டது. இந்நிலையில் 2022-23 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி ஏய்ப்பு இரு மடங்காக உயர்ந்து ரூ.1.01 லட்சம் கோடியாக உள்ளது.

2020-21 நிதி ஆண்டில் 12,596 ஜிஎஸ்டி ஏய்ப்புகளும், 2021-22 நிதி ஆண்டில் 12,574 ஜிஎஸ்டி ஏய்ப்புகளும் கண்டறியப்பட்ட நிலையில், 2022-23 நிதி ஆண்டில் 14,000 ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

2017 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையில் ரூ.3.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.1.03 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக 1,402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

முறையாக ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களை டேட்டா அனாலிடிக்ஸ் உட்பட நவீன தொழில்நுட்பம் வழியாக கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017 ஜூலை மாதம் முதல் 2023 பிப்ரவரி வரையில் ரூ.3.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE