போர்ன்விட்டா சர்ச்சை | வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படுமா?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரபல பிராண்டான போர்ன்விட்டா தொடர்பான சர்ச்சையை அடுத்து, உணவுப்பொருட்களின் தரம் மற்றம் பாதுகாப்புக்கான இந்திய ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவிடுவதன்மூலம் கவனத்தை ஈர்த்து வரும் ரேவந்த் ஹிமாத்சிங்கா, கடந்த 1-ம் தேதி போர்ன்விட்டா தொடர்பாக ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், போர்ன்விட்டாவில் சர்க்கரை அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பதாகவும், அதனை பாலில் கலந்து குடிப்பது தீங்கானது என்றும் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் 1.35 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அவரது இந்த வீடியோவை அடுத்து, போர்ன்விட்டா பிராண்ட் நிறுவனமான மோன்டலெஸ் இந்தியா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மன்னிப்புக் கோரிய ரேவந்த் ஹிமாத்சிங்கா, கடந்த 13-ம் தேதி அந்த வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் இருந்து நீக்கினார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவரது ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்நிலையில், ரேவந்த் ஹிமாத்சிங்கா தனது வீடியோவில் தெரிவித்திருந்த கருத்துக்கு ஊட்டச்சத்து சார்ந்த கொள்கைகளை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் சிந்தனைக் குழுவான நாபி (NAPi) ஆதரவு தெரிவித்துள்ளது. போர்விட்டாவின் விளம்பரங்களும், அதன் பின் அட்டையில் உள்ள விவரமும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடியவை என்றும், போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரையின் அளவு தெரிவிக்கப்படவில்லை என்றும் நாபி குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறையில் அது புகாரும் அளித்திருக்கிறது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள போர்ன்விட்டா, ''போர்ன்விட்டாவின் ஒவ்வொரு 20 கிராமிலும் 7.5 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இது தோராயமாக ஒன்றரை டீஸ்பூன் அளவு கொண்டது. குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம் என்ற அனுமதிக்கப்பட்ட அளவைவிட இது மிகவும் குறைவானதே'' என்று தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சையை அடுத்து, உணவுப்பொருட்களின் தரம் மற்றம் பாதுகாப்புக்கான இந்திய ஆணையத்தின் (FSSAI) செயல்பாடு கேள்விக்குள்ளாகி இருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் இந்த ஆணையம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவை அதிகமாக இருந்தால் அதை பாக்கெட்டின் முன் அட்டையில் குறிப்பிட வேண்டும் என்ற வழிமுறை இதுவரை அமலுக்கு கொண்டுவரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அதோடு, பொருட்களின் தரத்திற்கு ஏற்ப அவற்றுக்கு நட்சத்திர மதிப்பு வழங்கும் பரிந்துரையும் கிடப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாபி-யின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண் குப்தா, ''தரக்கட்டுப்பாட்டுக்கான தனது வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதை FSSAI தொடர்ந்து தாமதிக்கிறது. ஒரு உணவுப் பொருளில் உள்ள சர்க்கரையின் அளவை அட்டையின் முன் பகுதியில் தெரிவிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட வேண்டியது மிகவும் அவசியம். புகார் அளிக்கப்பட்டால் அதன் மீது மட்டுமே FSSAI நடவடிக்கை எடுக்கிறது. அதோடு, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது'' என குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE