ரெப்போ விகித நிலை வளர்ச்சிக்கு உதவும்: பியோ தலைவர் ஏ.சக்திவேல் கருத்து

By செய்திப்பிரிவு

திருப்பூர்: ரெப்போ விகித நிலை வளர்ச்சிக்கு உதவும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருப்பதன் மூலம் முதலீடு அதிகரித்து வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். பெரும்பாலான மத்திய வங்கிகள் பண வீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையை உருவாக்கி, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.

அதிகரித்துவரும் முதலீடு உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும். இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் குறையும். கடந்த ஒன்றரை ஆண்டில், வட்டி மானியத்தை 2 சதவீதம் மற்றும் 3 சதவீதத்திலிருந்து முறையே 3 சதவீதம் மற்றும் 5 சதவீதம் ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது நமது ஏற்றுமதியாளர்களுக்கு கடன் செலவு கணிசமாக குறைய உதவும்.

2022-23-ம் ஆண்டில் நமது பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 770 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி, 15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் பின்னணியில் இது ஒரு பெரிய சாதனையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE