அரசு கொள்முதலில் ஈடுபடுவதால் தேங்காய்க்கு கூடுதல் விலை: பட்டுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தனியார் வியாபாரிகளை காட்டிலும் அரசே கொள்முதலில் ஈடுபடுவதால் தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கமான (நாஃபெட்) மூலம், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொள்முதல் இன்று (ஏப்.3) முதல் தொடங்கியது.

தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக, மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், நடப்பாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அரவை கொப்பரை தேங்காயினை ஏப்ரல் முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிய ஆறு மாத காலத்துக்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற வீதத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது என, ஏற்கெனவே வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நாஃபெட் மூலம் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. இதனை பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில், தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு, பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர் மா.மார்ட்டின் எட்வர்டு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 15 தென்னை விவசாயிகள் 5 டன் அளவுக்கு தேங்காய் கொப்பரையை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு கூறுகையில், "தேங்காய் கொப்பரை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் 6 சதவீதத்துக்குட்பட்ட ஈரப்பதத்துடன் சில்லுகள், சுருக்கம் கொண்ட கொப்பரை, பூஞ்சாணம் கொப்பரை இல்லாமலும், கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீத்துக்கு மிகாமலும் தரத்துடன் உள்ள கொப்பரையுடன், சிட்டா, அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை தேங்காயை விற்க அணுகலாம். இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை ஆறு மாதத்துக்கு செயல்படும்.

தற்போது தனியார் வியாபாரிகள் அரவை கொப்பரை கிலோ ரூ.80 வரை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் நாஃபெட் மூலம் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60 என அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளபடி கொள்முதல் செய்யப்பட்டு நாபெட் நிறுவனத்தால் பணம் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும். தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், தேங்காய், குடுமி தேங்காய் மறைமுக ஏல முறையில் தேங்காய் விற்பனை செய்து தரப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE