இந்தியாவில் மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.8% ஆக அதிகரிப்பு: கடந்த 3 மாதங்களில் இல்லாத சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: 2023 மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7.8% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 மாதங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான (சிஎம்ஐஇ) இந்தப் பின்னடைவை கணித்துள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் வேலைவாய்ப்பின்மை 7.5% ஆக இருந்த நிலையில் மார்ச் மாதம் 7.8% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.4 சதவீதமாகவும், கிராமப்புரங்களில் 7.5 சதவீதமாகவும் உள்ளது.

இது குறித்து சிஎம்ஐஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறியதாவது: “இந்தியாவின் தொழிலாளர் சந்தை 2023 மார்ச்சில் சரிவை சந்தித்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிப்ரவரியில் 7.5 சதவீதமாக இருந்த நிலையில் அது மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்துடனேயே தொழிலாளர் சக்தி பங்களிப்பும் 39.9%ல் இருந்து 39.8% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, வேலைவாய்ப்பு விகிதம் பிப்ரவரியில் 36.9 சதவீதத்தில் இருந்தது, மார்ச் மாதத்தில் 36.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. எண்ணிக்கையில் குறிப்பிட வேண்டுமென்றால் 409.9 மில்லியனில் இருந்து 407.6 மில்லியனாகக் குறைந்துள்ளது.

மாநில வாரியாக வேலைவாய்ப்பின்மை நிலவரத்தைப் பார்க்கும்போது ஹரியாணாவில் அதிகபட்சமாக (26.8%) வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. ராஜஸ்தானில் (26.4%), ஜம்மு காஷ்மீரில் (23.1%), சிக்கிமில் (20.7%), பிஹாரில் (17.6%) and ஜார்க்கண்டில் (17.5%) வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. உத்தராகண்ட், சத்தீஸ்கர், புதுச்சேரி, குஜராத், கர்நாடகா, மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE