2022-23-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.18.10 லட்சம் கோடி - முந்தைய நிதியாண்டைவிட 22% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2022-23 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.18.10 லட்சம் கோடி என்றும், இது 2021-22 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 22% அதிகம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2022-23 நிதி ஆண்டு நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில், அந்த நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2022-23 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.18.10 லட்சம் கோடி. இது 2021-22 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 22% அதிகம். கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 13% உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.6 லட்சம் கோடி. 12-வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. இந்த நிதி ஆண்டின் சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடி. கடந்த மாதத்தில் பொருட்கள் இறக்குமதி 8% உயர்ந்துள்ளது. பரிமாற்றம் மற்றும் சேவை இறக்குமதி 14% உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ரிட்டன்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம். கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனை 14.40% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த தேசிய வளர்ச்சியைக் காட்டிலும் கூடுதல் வளர்ச்சியை கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, தமிழ்நாடு, பிகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 16 மாநிலங்கள் கண்டுள்ளன.

அதேநேரத்தில், சில மாநிலங்கள் குறைவான வளர்ச்சியை கண்டுள்ளன. இமாச்சல பிரதேசம் (8.1%), குஜராத் (8.30%), ஆந்திரப் பிரதேசம் (11.30%), மகாராஷ்டிரா (11.80%), கேரளா (12.70%, தெலங்கானா (13.25%), மேற்கு வங்கம் (13.90%) ஆகிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE