உலக வங்கி தலைவராக அமெரிக்க வாழ் இந்தியர் அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் இந்திய சீக்கியரான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.

உலக வங்கியின் தற்போதைய தலைவரான மால்பாஸ், காலநிலை மாற்றத்திற்கான உலக வங்கியின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். காலநிலை மாற்றம் தொடர்பான உலக வங்கியின் கொள்கைக்கு மாறாக தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்பாகவே அதாவது வரும் ஜூன் மாதத்தோடு அவர் பதவி விலக இருக்கிறார்.

இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை உலக வங்கி தொடங்கியது. இந்தப் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அஜய் பங்காவை முன்மொழிந்தார். பின்னர் இது குறித்து கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜெனட் யேலன், அடுத்த சில மாதங்களில் உலக வங்கியில் மிக முக்கிய மாற்றம் ஏற்படப் போகிறது. அதன் தலைவராக ஜோ பைடனின் வேட்பாளரான அஜய் பங்கா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

உலக வங்கியின் முன்னேற்றத்திற்காகவும், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை அஜய் பங்கா எடுப்பார். அவரது தேர்வு, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உதவும் என தெரிவித்திருந்தார்.

உலக வங்கியின் தலைவர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 30. எனினும், அஜய் பங்கா ஒருவர் மட்டுமே இதற்காக விண்ணப்பித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவரது பெயரை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும் என்றும், முறைப்படி அஜய் பங்காவிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் வாஷிங்டனில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நேர்காணல் தேதி குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் புதிய தலைவர் வரும் மே மாதத்துக்குள் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அது கூறியுள்ளது.

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE