கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பூத்துக் குலுங்கும் காபி செடிகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ் மலைக் கிராமங்களில் காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் காபியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடியில் இருந்து பெரும்பான்மையாக ஏற்றுமதியாகிறது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பறையூர், காமனூர், கே.சி.பட்டி, பாச்சலூர், ஆடலூர், பெரும்பாறை, பன்றிமலை பகுதியில் அரபிகா, ரொபஸ்டா வகை காபி 33 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு காபி செடி குறைந்தது 40 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழக் கூடியது. சமீபத்தில் கொடைக்கானல் மேல் மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் தற்போது காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மை நிறத்தில் பூத்துள்ள காபி பூக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. காபி அறுவடை அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி வரை நடைபெறும்.

இது குறித்து தாண்டிக்குடியை சேர்ந்த காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''கோடை மழை பெய்ததால் காபி செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். காபி விவசாயத்தை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இன்னும் இரண்டு, மூன்று மழை பெய்தால் அறுவடையின் போது எதிர்ப்பார்த்த மகசூல் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ காபி கொட்டை ரூ.300 வரை விற்பனையாகிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE