ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கையால் ட்விட்டர் நிறுவனருக்கு ரூ.4,265 கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அதானி குழுமத்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் நேற்று முன்தினம் புதிய அறிக்கையை வெளியிட்டது. இம்முறை, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாக் என்ற பணப் பரிவர்த்தனை நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி, ப்ளாக் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். ப்ளாக் நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கையை ஜாக் டோர்ஸி உயர்த்தி கூறியுள்ளார் என்று ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், கரோனா சமயத்தில் அரசு நிதி உதவிகளை அறிவித்தபோது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜாக் டோர்ஸியும் சில உயர் அதிகாரிகளும் இணைந்து 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) மதிப்பிலான பங்குகளை விற்று லாபம் பார்த்துள்ளனர் என்று குற்றம்சாட்டி உள்ளது.

ஹிண்டன்பர்கின் இந்தக் குற்றச்சாட்டால், ப்ளாக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. ப்ளாக் நிறுவனத்தில் ஜாக் டோர்ஸிக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) சொத்து உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் அவருக்கு 526 மில்லியன் டாலர் (ரூ.4,265 கோடி) இழப்பு ஏற்பட்டது.

இந்த அறிக்கையில், ப்ளாக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அமிர்தா அஜுஜாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE