ஹிண்டன்பர்க்கின் மோசடி குற்றச்சாட்டு: ஜாக் டோர்ஸியின் ப்ளாக் நிறுவன பங்கின் விலையும் கடும் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஹிண்டன்பர்க் நிறுவனம் மிக விரைவில் மற்றொரு ஆய்வறிக்கையை வெளியிடவிருப்பதாக கூறிய நிலையில் அதுகுறித்து நிறுவன உலகில்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ப்ளாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் டோர்ஸி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக ஹிண்டன்பர்க் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜாக் டோர்ஸி 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) அளவுக்கு ப்ளாக் நிறுவனத்தில் மோசடி செய்துள்ளதாக ஹிண்டன் பர்க் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் நடத்திய விரிவான விசாரணைக்குப் பிறகு இந்தஅறிக்கையை வெளியிடுவதாக ஹிண்டன்பர்க்நிறுவனத்தின் தலைவர் நாதன்ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கையை அடுத்து மொபைல் பேமண்ட் நிறுவனமான ப்ளாக் பங்கின்விலை அமெரிக்க நியூயார்க் பங்குச் சந்தையில்வர்த்தக நேர தொடக்கத்தில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்தான கடுமையான குற்றச்சாட்டுகளை கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஒற்றை அறிக்கையால் தொழிலதிபர் கவுதம் அதானியின் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. அதேபோல், தற்போது வெளியான அறிக்கையால் ஜாக் டோர்ஸியின் ப்ளாக் நிறுவன பங்கின் விலையும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE