தொழில்முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிக்க அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்கவும் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கும் வண்ணம், வரும் நிதியாண்டில் இருந்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், இயந்திரங்கள், கருவிகளை கொள்முதல் செய்ய 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம், வரும் 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1,580 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE