அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்: இந்தச் சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது ஏர்டெல் டெலிகாம் நிறுவனம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என அனைத்து பயனர்களும் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த அறிமுக சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.

இந்திய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ள ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் முறையில் பயனர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், 5ஜி சேவையின் அறிமுக சலுகையாக பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்பாட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவை கிடைக்க பெறும் அனைத்துப் பகுதிகளிலும் பயனர்கள் இந்த அறிமுக சலுகையை தடையின்றி பெற முடியும் என தெரிகிறது. ரூ.239 அல்லது அதற்கும் மேலான கட்டணத்தில் ரீசார்ஜ் செய்த ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த அறிமுக சலுகையை பெறலாம் எனத் தெரிகிறது.

சலுகையை பயனர்கள் பெறுவது எப்படி? - 5ஜி இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் போனில் ‘ஏர்டெல் தேங்ஸ்’ செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் ‘Claim Unlimited 5G data’ தேர்வு செய்து அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம். பயனர்கள் ரீசார்ஜ் செய்துள்ள பிரதான பேக்கின் (Pack) பயன்பாடு முடிந்ததும் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம்.

உதாரணமாக, பயனர்கள் ரூ.239 ரீசார்ஜ் செய்திருந்தால். அதன் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள், தினந்தோறும் 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அந்த 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தி முடித்த பின்னர் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயனர்கள் பெறலாம். இதற்காக பயனர்கள் சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிகிறது. ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் பயனர்களுக்கு அறிமுக சலுகையாக அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE