ரூ. 2 லட்சம் முதலீட்டில்கூட தொழில் முனைவோராக மாறலாம்: இந்திய கயிறு வாரிய தலைவர்

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: ரூ. 2 லட்சம் முதலீட்டில்கூட தொழில் முனைவோராக மாறலாம் என்று இந்திய கயிறு வாரிய தலைவர் டி.குப்புராமு தெரிவித்துள்ளார்.

இந்திய கயிறு வாரியத்தின் பொள்ளாட்சி மண்டல அலுவலகம் சார்பில் ராமநாதபுரத்தில் உள்ள திருமண மகாலில் தொழில்முனைவோருக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கயிறு வாரிய மண்டல அலுவலர் கோபு வரவேற்றார். கயிறு வாரியத்தின் தலைவர் டி.குப்புராமு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பேசினர். பயிற்சி முகாமில் பெண் தொழில்முனைவோர் உள்ளிட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கயிறு வாரியத்தின் தலைவர் டி.குப்புராமு செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இந்திய கயிறு வாரியம் செயல்பட்டு வருகிறது. தென்னை கழிவுகளை கோடிகளாக மாற்றுவதுதான் இவ்வாரியத்தின் வேலை. நாட்டில் 14 மாநிலங்களில் இத்தொழிலுக்கான வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் இத்தொழிலை கொண்டுவர அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம்.

தென்னை நாறிலிருந்து தயாரிக்கப்படும் கயிறு உள்ளிட்ட பொருட்கள், இயற்கை உரமாக பயன்படும் கழிவுகள் மற்றும் மதிப்புகூட்டு பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. கயிறு பொருட்கள் ஏற்றுமதி முன்பு ரூ. 3,779 கோடியாக இருந்தது. அது கடந்த 2021-22-ல் ரூ. 4,340 கோடியாக உயர்த்தி உள்ளோம். இந்த நிதி ஆண்டில் ரூ. 4,500 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இன்னும் 2 ஆண்டுகளில் 10,000 கோடியாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடியாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உலகத் தரத்திலான பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன. சாலை திட்டங்களில்கூட கயிறு பாய் விரித்து அதற்கு மேல் சாலை அமைக்கும்போது 40 சதவீதம் தரம் அதிகரிக்கும்; உற்பத்திச் செலவும் 30 சதவீதம் குறையும். இத்திட்டத்தை 7 மாநிலங்களில் கிராமச் சாலைகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தொழிலில் குறைவாக ரூ. 2 லட்சத்தில் கூட முதலீடு செய்து, தொழில் முனைவோராக மாறலாம். ரூ. 25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இத்தொழிலில் மதிப்புக்கூட்டு பொருட்கள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE