கேம்ப கோலா பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ்!

By செய்திப்பிரிவு

மும்பை: சுமார் 50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கேம்ப கோலா குளிர்பானத்தை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ். ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்பு லிமிடெட் சார்பில் இது சந்தையில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1970-களில் இந்திய சந்தையில் அறிமுகமான பானம்தான் கேம்ப கோலா. ப்யூர் ட்ரிங்ஸ் குழுமம் இதனை தயாரித்து, விற்பனை செய்து வந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரபல பானங்களில் முன்னணி வரிசையில் இது இருந்தது. 1900-களில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களின் வருகையால் மெல்ல தனது சந்தை வாய்ப்பை இழந்தது கேம்ப கோலா.

இந்நிலையில், கடந்த ஆண்டு 22 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கேம்ப கோலாவை வாங்கியது. இந்தியாவில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் அதை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ், தற்போது கேம்ப கோலா பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கேம்ப கோலா, கேம்ப ஆரஞ்சு, கேம்ப லெமன் சுவையில் இந்த பானம் அறிமுகமாகி உள்ளது.

200, 500, 600 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர், 2 லிட்டர் என இந்த பானங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் என சந்தையில் இது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இதன் விற்பனை மேற்கொள்ளப்படும் என தகவல். நிச்சயம் இது பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் என நம்புவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE