இந்திய செமிகன்டக்டர் சந்தை ஆண்டுக்கு ரூ.4.55 லட்சம் கோடியாக உயரும்: டெலோய்ட்டி இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய செமிகன்டக்டர் சந்தை இன்னும் 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.4.55 லட்சம் கோடியாக உயரும் என்றும், இது 2030க்குள் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் டெலோய்ட்டி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம், ஊடகம், தொலைத்தொடர்பு துறைகளில் முன்னிலை வகிக்கும் டெலோய்ட்டி இந்தியா (Deloitte India) நிறுவனம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: ''இந்திய செமிகன்டெக்டர் சந்தை வரும் 2026-க்குள் ரூ.4.55 லட்சம் கோடியாக உயரும். செமிகன்டெக்டர் சந்தையில் 60 சதவீதத்தை, மொபைல்போன்கள், அணியக்கூடிய பொருட்கள், வாகன பாகங்கள், கணினி, தரவு சேமிப்பு (chip) ஆகியவையே கொண்டிருக்கின்றன. இந்திய செமிகன்டெக்டர் சந்தை வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும். அதேபோல், 6 லட்சம் வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும்.

சர்வதேச அளவில் பொருளாதார சவால்கள் அதிகரித்தாலும், 5ஜி புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். வரும் 2025-28 காலகட்டத்தில், செமிகன்டக்டர் மற்றும் சிப் ஆகியவற்றின் தொழில்நுட்பம் மேம்படும். இந்தியாவில் உற்பத்திக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் தயாரிப்புக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை காரணமாக செமிகன்டக்டர் உற்பத்தித் துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். எனவே, செமிகன்டக்டர் துறையின் மையமாக இந்தியா உருவெடுக்கும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE