உலக அளவில் வெங்காய தட்டுப்பாடு: உணவு நெருக்கடிக்கு வழிவகுக்குமா?

By எல்லுச்சாமி கார்த்திக்

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் உணவில் வெங்காயத்தை தவிர்க்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் வெங்காயத்தின் விலை என தெரிகிறது. வெங்காயத்திற்கு உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விலையில் ஏற்றம் கண்டுள்ளதாம். உலக அளவில் இதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்திய சமையல், இத்தாலிய சமையல் என உலகின் அனைத்து முறை சமையலிலும் தவிர்க்க முடியாத காய்கறி என்றால் அது வெங்காயம்தான். ஆண்டுக்கு சுமார் 106 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு வெங்காயத்தின் உற்பத்தி உலகளவில் இருப்பதாக தெரிகிறது. உலக மக்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் ஒன்று இது. பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலில் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு தொடங்கியதாக தெரிகிறது. அதன் காரணமாக அங்கு வெங்காயத்தை கடத்தும் பணிகள் நடந்ததாக தகவல். அப்படியே அது உலக அளவில் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது.

இதனால் மொராக்கோ, துருக்கி மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் வெங்காய விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், வெங்காயத்தின் விலை ஏற்றம் இதர காய் மற்றும் கனிகள் மீதான விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது. ஸ்பெயின் மற்றும் வட ஆப்பிரிக்காவில் மோசமான வெங்காய அறுவடை காரணமாக பிரிட்டன் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

வெங்காய தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? - இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சூழல், காலநிலை மாற்றம் என உலகளவில் வெங்காய தட்டுப்பாட்டுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம், மத்திய ஆசியாவில் பயிர்களை சேதப்படுத்திய அதீத பனி, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் போன்றவை இதற்கான முக்கியக் காரணங்களாக இருப்பதாக தெரிகிறது.

அதே போல வட ஆப்பிரிக்காவில் விதை, உரம் போன்ற பயிர் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்ததும், வறட்சியும் காரணமாக சொல்லப்படுகிறது. மொராக்கோவில் மோசமான வானிலை காரணமாக வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல்.

உணவு நெருக்கடிக்கு வழிவகுக்குமா? - பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் மீதான விலை உயர்வு காரணமாக உப்பு, சர்க்கரை போன்றவற்றின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அங்கு இறைச்சியின் விலையை காட்டிலும் இதன் விலை அதிகம் என சொல்லப்படுகிறது.

கஜகஸ்தானில், வெங்காய தட்டுப்பாட்டை கையாள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அங்கு ஏற்றுமதிக்கு தடை, மக்கள் மொத்தமாக வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் வெங்காய விலை உயர்வு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் கனிகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா தரவுகளின் படி சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாது சூழல் இருக்கலாம் என தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE