வேலூர் இலவம்பாடி முள் கத்திரி, ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு - ஏற்றுமதி, அதிக வருவாய்க்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் / ராமநாதபுரம்: வேலூர் இலவம்பாடி முள் கத்திரி, ராமநாதபுரம் மிண்டு மிளகாய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிப்பதோடு, போலிகள் தவிர்க்கப்பட்டு வருவாய் பெருகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு அதிக வருவாய் கிடைக்கும் தோட்டக்கலை பயிர்களில் முள் கத்திரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வெளி மாவட்டங்களில் வேலூர் முள் கத்திரி என்று அழைத்தாலும் வேலூர் மாவட்ட அளவில் அதற்கு இலவம்பாடி முள் கத்திரி என்ற பெயரும் உள்ளது.

அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டாரங்களில் பரவலாக பயிரிடப்படும் முள் கத்திரிக்கு சென்னை, பெங்களூரு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம், வேலூர் முள் கத்திரிக்கு இணையாக வேறு எந்த வகை கத்திரியின் சுவையும் ஈடாவதில்லை. அதிலும், பிரியாணியுடன் முள் கத்திரி தொக்கை சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வரும் முள் கத்திரிக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடுகிடைத்துள்ள தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் இரண்டாண்டு முயற்சியால் வேலூர் முள் கத்திரிக்கு புவி சார் குறியீடு கிடைத்திருப்பது குறிப் பிடத்தக்கது.

300 ஹெக்டேர் சாகுபடி: வேலூர் மாவட்டத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 300 ஹெக்டேரில் முள் கத்திரி பயரிட்டு வருகின்றனர். வறட்சி மற்றும் கடுமையான வெயிலை தாங்கி வளரக்கூடிய வேலூர் முள் கத்திரிஏக்கருக்கு 40-45 டன் விளைச்சல் தரக்கூடியது. அடர் நீலம், இளஞ் சிவப்பு வண்ணம் கொண்ட முள் கத்திரியின் காம்பின் குடை பகுதியில் முட்கள் காணப்படும்.

வேலூர் முள் கத்திரிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறித்து வேலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் மோகன் கூறும்போது, ‘‘இந்த மாவட்டத்தின் தனித்துவமான பாரம்பரிய பயிர்களில் முள் கத்திரி முக்கியமானது. தனி சுவையும் கொண்டது. வேலூர் முள் கத்திரியை இயற்கை முறையில் விவசாயம் செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம்.

வேலூர் முள் கத்திரிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இனி போலிகள் தவிர்க்கப்படும். சென்னை, பெங்களூரு சந்தையில் வேலூர் முள் கத்திரிக்கு அதிக வரவேற்பு இருக்கும். வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு கிடைத் திருப்பதால் இனி கிலோ ரூ.100 வரை விற்பனையாகும். முள் கத்திரியை தொடர்ந்து ஒடுகத்தூர் கொய்யாவுக்கும் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

முண்டு மிளகாய்: இதேபோன்று,ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருப்பதால், மாவட்டத்தில் முண்டு மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே பிரத் யேகமாக ராமநாதபுரம் மாவட்டத் தில்தான் குண்டு மிளகாய் எனப் படும் ராமநாதபுரம் முண்டு மிளகாய் விளைவிக்கப் படுகிறது.

வறட்சியிலும், மானாவாரியாக மாவட்டத்தில் ஆண்டுக்கு 14,000 விவசாயிகளால் 13,500 ஹெக்டேர் வரை முண்டு மிளகாய் பயிரிடப்படுகின்றன. காரம் குறைவாகவும், மிளகாய் பொடி அதிகமாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இம்மிளகாய்க்கு வரவேற்பு உள்ளது.

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகாய் பயிரிடப்பட்டு வந்தும், இதற்கான உரியஅங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நபார்டு வங்கி மூலம் விவசாயிகளை ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட ‘ராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர் நிறுவனம்’ 2021-ம் ஆண்டு புவி சார் குறீயீடு கேட்டு, மத்திய அரசின் தொழில் மற்றும் வணிகத்துறையிடம் விண்ணப்பித்தது.

இந்நிலையில் மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை கடந்த 21.10.2022-ல் புவி சார் குறீயீடு வழங்குவதற்கான ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவிக்கலாம் என தனது துறை மூலம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதற்கான காலம், கடந்த பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததால், புவிசார் குறீயீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் அருண்குமார் கூறியதாவது. "ராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் விவசாயிகளை ஒருங்கிணைத்து எங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், உற்பத்தி பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும், அவர்களது தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யவும் இந்த நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர் நிறுவனம் விண்ணப்பித்ததன் அடிப்படையில் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறீயீடு அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான சான்றிதழ் இன்னும் 10 நாட்களுக்குள் கிடைத்துவிடும்" என்றார்.

இது குறித்து ராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் காந்திராஜன் கூறியதாவது, "புவீசார் குறீயீடு கிடைத்திருப்பது ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.இதுவரை அங்கீகாரம் இல்லாத இதற்கு, புவிசார் குறீயீடு கிடைத்திருப்பது, உலகளவில் முண்டு மிளகாயக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உற்பத்தி அதிகரித்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். உலகளவில் சந்தைப் படுத்தவும் எளிதாக இருக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்