சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 139 புள்ளிகள் (0.23 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,605 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் (0.25 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,511 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் சரிவுடன் தொடங்கி பின்னர் மீண்டும் ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியது. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 150.05 புள்ளிகள் உயர்வடைந்து 59,895.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6.45 புள்ளிகள் உயர்வடைந்து 17,560.75 ஆக இருந்தது.

மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகப்படுத்தலாம் என்ற குறிப்புகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் வட்டி விகித உயர்வு குறித்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். மேலும், பிப்ரவரி மாத எஃப் அண்ட் ஓ பங்குகளின் காலாவதி தேதியின் கடைசி நாள் என்பதால் ஏற்ற இறக்கத்துடன் பயணித்த வர்த்தகம் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. இன்றைய நாளில் சென்செக்ஸ் அதிகபட்சமாக, 59,960 ஆகவும் குறைந்தபட்சமாகத 59,406 ஆகவும் இருந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 139.18 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 59,605.80 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,511.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE