டிராக்டர், ஆட்டோமொபைல் துறையில் வார்ப்பட தேவை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: நாடு முழுவதும் டிராக்டர் விற்பனை 80 சதவீதம் அதிகரிப்பு, ஆட்டோமொபைல் துறையின் நிலையான வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக கோவையில் உள்ள வார்ப்பட தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி பிரிவின் கீழ் செயல்படும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் வார்ப்படம் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் 600 வார்ப்பட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தேசிய அளவில் டிராக்டர் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் வார்ப்பட தேவை அதிகரித்துள்ளதால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வார்ப்பட தொழில் நிறுவனங்களின் தேசிய தொழில் அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரி மென்’(ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துகுமார் மற்றும் கோவை கிளையின் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூறியதாவது: டிராக்டர், ஆட்டோமொபைல் துறையில் வார்ப்பட தேவை அதிகரித்துள்ளது.

குறிப்பாக டிராக்டர் விற்பனை 50 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள வார்ப்பட தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன. வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

கோவையில் உள்ள தொழில் நிறுவனமொன்றில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள வார்ப்பட பொருட்கள். (கோப்புப் படம்)பம்ப்செட் தொழில் நிறுவனங்களில் ஜனவரியில் பணி ஆணைகள் அதிகம் வரத் தொடங்கிய நிலையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் கோடை காலம் தொடங்க உள்ளதால் பம்ப்செட் சந்தையும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நம்பப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பணப்புழக்கம் மற்றும் மக்கள் மத்தியில் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் அதிபர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது: மூலப்பொருட்களான ‘பிக் அயர்ன்’ ‘ஸ்கிராப்’ உள்ளிட்ட பல பொருட்களின் விலையில் கடந்த ஓராண்டாகவே நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

30 சதவீத பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து வார்ப்படம் பெற தொடங்கியுள்ளனர். மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சிறப்பு கமிட்டியை ஏற்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- இல.ராஜகோபால்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE