பங்குச்சந்தை: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிவடைந்து 59,723 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 7 புள்ளிகள் சரிவடைந்து 17,547 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியது. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 150.05 புள்ளிகள் உயர்வடைந்து 59,895.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6.45 புள்ளிகள் உயர்வடைந்து 17,560.75 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் நிலவும் குழப்பமான சூழல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரிக்க இருப்பதாக வெளியான அமெரிக்க பெடரல் வங்கியின் குறிப்புகள் முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, ஏற்றம் நோக்கி நகர்ந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், டாடா மோாட்டார்ஸ், விப்ரோ, ஐடிசி, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE