நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.1,500 கோடியை அளித்தது அதானி குழுமம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. இதுவரையில் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் அக்குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடம் வகித்துவந்த அதானி, இந்த அறிக்கையால் 26- வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், அதானி குழுமத்துக்கு ரூ.2.26 லட்சம் கோடி கடன் உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் முதலீட்டாளர்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்க அதானி குழுமம் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த திங்கள்கிழமை அதானி போர்ட் நிறுவனம் ரூ.1,500 கோடி கடனை திருப்பிச் செலுத்தி யுள்ளது. இதில் ரூ.1,000 கோடி எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறு வனத்துக்கும் ரூ.500 கோடி ஆதித்ய பிர்லா லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் வழங்கப் பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அதானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதானி நிறுவன ஊழியர்கள் சிலர், அதானி மற்றும் அவரது குடும்பம் தொடர்புடைய விக்கிப் பீடியா கட்டுரைகளில் நடுநிலையற்ற தகவல்களைச் சேர்த்ததாக விக்கிப்பீடியாவின் செய்தி இதழான ‘தி சைன் போஸ்ட்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

“அதானி பற்றிய கட்டுரைகள் 2007-ம் ஆண்டு முதல் விக்கிபீடியா பக்கத்தில் எழுதப்பட்டு வருகின்றன. இதுவரையில் 40 போலிகணக்குகள் மூலம் விக்கிப்பீடியாவில் அதானி மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தொடர்பான 9 கட்டுரைகளில் நடுநிலையற்ற தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் அதானி நிறுவன ஊழியர்கள்” என்று ‘தி சைன் போஸ்ட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE