ஓசூர் விமான நிலைய திட்டம் ரத்து: தொழில்முனைவோர் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டதால், தொழில் முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஓசூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் மற்றும் மலர் சாகுபடி உள்ளதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக சுழற்சி நடந்து வருகிறது. உற்பத்தி பொருட்கள் மற்றும் கொய்மலர்களை ஏற்றுமதி செய்ய ஓசூரிலிருந்து 55 கிமீ தூரத்தில் உள்ள கர்நாடக மாநிலம் கெம்பகவுடா சர்வ தேச விமான நிலையத்தை ஓசூர் தொழில்முனைவோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓசூரில் சர்வ தேச விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, 'மத்திய அரசின் உதான்' திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு விமானச் சேவை கிடைக்க ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங், "உதான் திட்டத்தின் முதல் ஏலத்தில் சென்னை-ஓசூர்- சென்னை விமான நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.

மத்திய அரசு செய்திருக்கும் ஒப்பந்தத்தில் விமான நிலையத்திலிருந்து 150 கிமீ தூரத்துக்கு (மைசூர் மற்றும் ஹசான் விமான நிலையங்கள் தவிர்த்து) புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் விமான நிலையங்களில் புதுப்பிப்பு, விரிவாக்கம் செய்யக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது.

உதான் திட்டத்துக்கான எதிர்வரும் ஏல பட்டியலிலிருந்து, ஓசூர்-சென்னை வழி விமான நிலையம் தகவல்கள் அகற்றப்படும்" என்றார். இந்த அறிவிப்பால், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தொழில்முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE