ஜிஎஸ்டி வசூலில் தமிழகம் 4-வது இடம்: மத்திய ஜிஎஸ்டி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம்: ஜிஎஸ்டி வசூலில், தமிழகம் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது, என்று சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் சுதா கோகா தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சேலம் மத்திய சேவை மற்றும் சரக்கு வரித்துறை அலுவலகம் சார்பில், சேலம் உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.

ஆணையர் சுதா கோகா தலைமை வகித்துப் பேசியதாவது: ஜிஎஸ்டி வசூலில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகம் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரை உள்ளடக்கிய சேலம் மண்டலம் ஜிஎஸ்டி வசூலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி-யில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு, வணிகர்கள், தொழிலதிபர்கள் செயல்பட வசதியாக, இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் சேவை மையம் உள்ளது. தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்றார்.

தொடர்ந்து, வணிகர்கள், தொழிலதிபர்களின் சந்தேகங் களுக்கு இணை ஆணையர் தீப்தி இஞ்சிமெடு பெடுமாள் பதிலளித்தார். நிகழ்ச்சியில், சேலம் உற்பத்திக்குழு கவுரவ செயலாளர் பாலசுந்தரம், தொழிலதிபர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE